புனித ஜார்ஜ் கோட்டை என்ற மதராஸ்
மதராஸ் வரலாற்றை எழுதி முடிக்கும் தருவாயில் அதன் கோட்டையின் சரிதத்தை எழுத முற்படுகிறேன்.காரணம் காலம்!
மிக ஆழ்ந்து கவனிக்க வேண்டிய, படித்து அறிய வேண்டிய, புரிந்து கொள்ள வேண்டிய பல விஷயங்கள் உள்ளன.
தரமான நூல்களைக் கொண்டு ஆய்வுகள் அமைய வேண்டும் அல்லவா?
இதன் இடையில் கோட்டையை இரு முறை சென்று மனமாரக் காலாரச் சுற்றிப் பார்த்தேன்.
அருங்காட்சியகத்தில் மிக கவனமாகப் பார்க்க வேண்டிய பொருள்கள் பல உள்ளன.
இவற்றின் இடையில் எதை கூறுவது, எதைத் தவிர்ப்பது என்ற குழப்பங்கள்....
ஒருவாறு கோட்டையை எப்படிச் சொற்கள் கொண்டு கட்டித் தருவது என்று இறையருளால் முடிவாகி இன்று [9.3.2016] அன்று எழுத முற்பட்டேன்.
***
கோட்டையின் சரிதத்தைக் காணும் முன் பல உண்மைகளை அறிவது எளிதான புரிதலுக்குத் துணை செய்யும்.
அவற்றை முதலில் முன் வைக்கிறேன்.
மதுரை மீனாக்ஷி அம்மன் கோயில் என்று அறிமுகம் செய்யும் போது மேலோட்டமான மிக முக்கியமான குறிப்புகளை மட்டும் முன் வைக்கும் முறை போலவே ஜார்ஜ் கோட்டையை மாணாக்கர்-மக்கள் பார்வையில் எளிமையாக முன் வைக்கிறேன்.
கோட்டையின் முன்னூறு ஆண்டு கால சரிதம் என்பது மிகவும் ஆழமானது.அவற்றில் பல மாணாக்கருக்கும் மக்களுக்கும் இப்போது தேவையில்லை என்று உணர்ந்தேன்.
பலாப்பழம் போல் இருக்கும் வரலாற்றை அரிந்து சுளை எடுத்து எளிதில் சுவைக்க உதவும் நோக்கில் இப்பகுதி அமைகிறது.
...