ஆடிப்பெருக்கில் கழார் முன் துறை...
நாகப்பட்டிணம் மாவட்டம் பூம்புகார் ஊருள் நுழையும் போது நாம் தாண்ட வேண்டிய காவிரியின் கடைசி shutter - கடை மடைப் பகுதி.இப்பகுதியைக் கழார் முன் துறை என்று சங்க நூல்கள் பகரும்.
நிலத்தின் பிற பகுதியில் இருந்து கழன்று கடலுடன் கலக்கும் ஆற்றின் பகுதி
இதுவே 2000 ஆண்டுகட்கு முன் பூம்புகாரின் நுழைவாயில்.இதை இன்று கழுதக்காரன் துறை என்பர்.
கோவேறு கழுதைகள் மூலம் துறைமுகம் முதல் இப்பகுதி வரை சிறு வணிகர் தம் வியாபாரப் பண்டங்களைக் கொண்டு வந்திட அப்பெயர் வந்திருக்கக் கூடும்.
இப்பகுதியைப் புனித நீராட்டக் கட்டப் பகுதியாக சிலப்பதிகாரமும் புறநானூறும் கூறும்.
குறிப்பாக ஆடிப் பெருகில் இப்பகுதியில் அதிகாலையில் முதலில் சோழன் தன் குடும்பத்துடன் நீராடி, பூஜைகள் செய்ய, அடுத்து மக்கள் ஆடிப் பெருக்கைத் தொடங்கினர்.
கண்ணகியார் காலத்தே பூம்புகாரை ஆண்டவன் மாவேந்தன் கரிகாலன்.அவன் மகள் ஆதிமந்தி.அவள் கரூவூர்ச் சேரர் [கொங்குச் சேரர்] இளவரசன் ஆட்டனத்தியைக் காதலித்து மணந்தாள்.
தலை ஆடிப் பெருக்கு விழாவிற்குப் பூம்புகார் வருகிறாள். தம்பதியினர் புது வெள்ளத்தில் இறங்கினர், காவிரி தன் காதல் கடலனைக் காண விரைந்தோடும் வேகத்தில் ஆட்டனத்தியை இழுத்துக் கொண்டு போக, ஊரே அல்லோலப்பட, வீரர்கள் தேட, கரிகாலன் உயிர் பதைபதைக்க, ஆதிமந்தி பித்து பிடுத்தவளாய்க் காவியுடனே ஓடினாள்.
ஆனால் காவிரி அவனைக் கடலுள் சென்று மூழ்க்கியது, ஊரே அல்லோலப்பட, ஆதிமந்தி, ”என் அன்பு உண்மையாயின் என் கணவனைக் காவிரி தருவாள்” என்று காவிரியின் சங்கமத்துறையில் நிற்க, மறுகரையில் வாழ்ந்த மீனவச்சி மருதி என்பவள் ஓடிக் கடலுள் பாய்ந்து [முத்துக்குளிக்கும் இனம்] ஆட்டத்தியை உயிருடன்கரை சேர்த்து, அவள் உயிர் விட்டாள்.
கரிகாலன் நன்றி மறவாதவன்.அவள் பெயரால் ஐந்து கிராமங்களை இணைத்து, அதற்கு மருதி குளம் என்ற நீர்நிலை கொடுத்து,வரி விலக்கு அளித்தான்.
அது முதல் கழார் முன் துறையில் ஆடிப்பெருக்கைக் கைவிட்டு, காவிரியின் சங்கமத்துறையில் கொண்டாடினர்.
கண்ணகியார் பார்க்க இந்த நிகழ்ச்சி ஏற்பட்டதை அவர் பாண்டியன் சபையில் கூறுவதை இளங்கோ பதிவாக்குகிறார்.
கற்பு ஒரு வேலி.
அது ஆணுக்கும் பெண்ணுக்கும் காப்பு.
இதையே செம்மீன் நாவல் மூலம் தகழி சிவசங்கரன் பிள்ளை [மலையாள ஜெயகாந்தன்] கூறினார்.அதுவே பாரத தேசத்தின் தொன்மம்.