நகரத்தாரின் குலவிளக்கான கண்ணகியார் - காரைக்குடி கொப்புடை நாயகி
கண்ணகியாரின் வாழ்க்கை முடிவுக்குப் பின் காவிரிப்பூம்பட்டிணத்தை ஆழிப்பேரலைகள் சீரழிக்க, துறைமுகம் சிதைந்து போக, அங்கு வாழ முடியாத, வாழப்பிடிக்காத உயர் வணிகர்கள் ஆகிய நகரத்தார் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்குப் புலம் பெயர்ந்தனர்.அவர்களுள் பெரும் பாலோர் சிவகங்கைப் பகுதி [பாண்டிய தேசம்] தனில் குடியேறினர்.அதுவே இன்றைய செட்டி நாடு.
காரைக்குடியைத் தலைமை வணிகத் தலமாகக் கொண்டு அவர்கள் வாழ்க்கை ஆரம்பித்த போது கண்ணகியாரைக் கொப்புடை நாயகி என்று கொற்றவையாக ஸ்தாபித்தனர்.கொப்பு - காதின் மேல் பகுதியில் அணிவிப்பது.கண்ணகியாரின் வலது காதின் கொப்பை அணிவித்தனர்.இடது காதின் கொப்பு சேர தேசமான கேரளத்தில் செட்டிக்குளம் கரை பகவதியின் காதில் உள்ளது.
காரைக்குடியின் அதிதேவதை கொப்புடை நாயகி.பாசம் த்ரிசூலம், மது பாத்ரம் அபய ஹஸ்தம் என அன்னை செப்புச்சிலை வடிவில் ஆயிரம் காலமாய் அருள்கிறாள். இன்றும் பாரம்பரியம் காக்க எண்ணும் நகரத்தார் கல்யாணத்துக்குச் செய்யும் மங்கல நாண் [கழுத்தேறு அணிகலன்] இவ்வன்னைக்கு அணிவித்தே எடுத்துச் செல்வர்.
அக்குலப்பெண்கள் ஆண்டுக்கு ஒரு முறையேனும் தம் கழுத்தேறை அன்னையின் பாதத்தில் சமர்ப்பித்து எடுத்துச் செல்வர்.
இவ்வூர் நகரத்தாரே இன்று பூம்புகாரின் பத்தினிக் கோட்டம் அமைத்து, ஆனி அனுஷம் அன்று கண்ணகியாருக்கு விழா எடுக்கின்றனர்.
காரைக்குடி வணிகர் தம் வாழ்வியல் செழிக்க வைக்கும் கொப்புடை நாயகியைக் காண்க.