Sakthi Foundation

நமக்கு நாமே பகைவர்கள் தானே?

[Grade 8th live lesson, 8.10.2015]

நம்முள் இருக்கும் தீய எண்ணங்களையே அசுரர்களாகப் புராண இதிகாசங்கள் உருவகம் செய்கின்றன.

தீய எண்ணத்தால் தீய செயல்களும் அதன்பின் தீய விளைவுகளும் ஏற்படுகின்றன.

இவை எல்லாம் நம்முள் இருக்கும் அறியாமையினால் தான் ஏற்படுகின்றன.

அறியாமைக்கு எதிரி அறிவு.இந்த தீய எண்ணங்களுக்கும் பூரண அறிவுக்கும் இடையில் ஏற்படும் tug off war தான் தேவதைகளுக்கும் அசுரர்களுக்கும் ஏற்படும் போர்கள் என உருவகம் செய்யப் படுகின்றன.

ஏசு சொல்வதைப் போல் ஒரு மனிதனின் தீய எண்ணத்தைக் கண்டிக்க வேண்டுமே தவிர அவனை வெறுக்கக் கூடாது.

சம்ஹாரம் என்ற வடமொழிச் சொல் ”மாற்றம்” என்பதையும் குறிக்கும்.

அசுரத் தனம் நம்முள் மாறுவதே தேவி செய்யும் சம்ஹாரம் அல்லது வதம்.

தீய எண்ணங்களைத் தவிர்க்க நம் அறிவு சக்தி சதா போராடுகின்றது.அந்த அறிவு சக்தியே தேவி.

நவராத்ரியில் பல்வேறு அசுரர்களுடன் தேவி போராடுவதாகக் காட்டப் படுகின்றது.

மதுகைடபர், மகிஷாசுரன், தூம்ரலோசனன், சுக்ரீவன், சண்ட முண்டர்கள், ரக்த பீஜன், சும்ப நிசும்பர்கள், மூகாசுரன், தாருகன் போன்ற பல அசுர சக்திகளுக்கும் தேவிக்கும் இடையில் போர் நிகழ்கின்றது.

இவ்வசுர சக்திகள் நம்முள் இருக்கும் நம் பகைவர்கள்.

நமக்கு நாமே பகைவர்கள்!

இவர்கள் நம்முள் எவ்வகையில் தீய எண்ணங்களாக இருக்கிறார்கள்?

மது கைடபர்கள் - ”எல்லா விஷயங்களிலும் நான் சரியாகவே இருக்கிறேன், I am very perfect, no one can teach me, advice me, for me every thing is ok'' என்ற எண்ணம்.

தூம்ரலோசனன் - எப்போதும் எல்லோரையும் எல்லாச் செயல்களையும் குறை கூறித் தவறு கண்டு பிடிக்கும் குணம்.

சுக்ரீவன் - இவன் ராமாயண சுக்ரீவன் அல்ல. தீய செயல்கள் செய்பவர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் உதவியும் செய்யும் தன்மை.

சும்ப நிசும்பர்கள் - தற்பெருமையுடன் தன்னிடம் உள்ள செல்வாக்கு, செல்வம் ஆகியவற்றைக் கொண்டு அனைவரையும் இகழ்ந்து இழிவாகப் பார்த்தல், அனைத்தையும் வாழ்க்கையில் கைக்கொள்ள வேண்டும் என்ற வெறித் தன்மை.

சண்ட முண்டர்கள் - மேற்கண்ட வெறித்தனம் வெற்றி பெறத் திட்டம் இடும் தீய அறிவு சக்தி.

மகிஷாசுரன் - நம்முள் இருக்கும் ஒட்டுமொத்த திமிர், ஆணவம், மமதை, அகங்காரம்.

மூகாசுரன் - எப்போதும் தீயதை பேசி அதை நிறைவேற்றும் தன்மை

ரக்த பீஜன் - தப்புக்கு மேல் தப்பு செய்யும் தன்மை. ஒரு தப்பை மறைக்க ஓராயிரம் தப்புகள் செய்யும் தன்மை.

நம்முள் இருக்கும் இப்பகைவர்களை அறிவாகிய சக்தியுடன் தான் எதிர் கொள்ள முடியும்.அதற்கே நவராத்ரி.