Sakthi foundation

நவராத்ரிப் பெருவிழா

நாம் தினமும் செல் ஃபோன் பயன்படுத்துகிறோம்.

சார்ஜ் தீரத் தீர அதை ரீ சார்ஜ் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது அல்லவா?

அது போலத் தான் நம் அன்றாடத் தேவைகளுக்கும், சந்தோஷ வாழ்வுக்கும் ப்ரபஞ்ச சக்தியாகிய பராசக்தியை [Cosmic energy] பயன்படுத்துகிறோம்.

சக்தியின் இயல்பு மாற்றம் ஆகும்.அதை யாரும் உருவாக்குவதும் இல்லை, இல்லாமல் செய்வதும் இல்லை.சக்தியானது ஒரு நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு மாறிய படியே இருக்கும்.

மின்சார சக்தி வீட்டில் வெளிச்சமாக, இசையாக மாறுகிறது அல்லவா அதுபோல்தான்.

கைப்பையில் இருக்கும் பணம் ஆசைப் பட்ட ஆடையாய் மாறுகிறது அல்லவா அதுபோல் தான்.

இப்ரஞ்ச சக்தியான பராசக்தியை, இதன் மாறும் இயல்பை வைத்துப் பெண்மையாக நம் முன்னோர்கள் உருவகம் செய்தனர், மதித்தனர், வழிபட்டனர்.

ஆக்கும் சக்தி, பாதுகாக்கும் சக்தி, மாற்றும் சக்தி என முப்பெரும் சக்திகளாக ஒரே சக்தி பகுக்கப்பட்டுள்ளது.

இதையே...

மஹா சரஸ்வதி - பூரண கல்வி, கலை அறிவு, ஞானம்

மஹாலக்ஷ்மி - பதினாறு பேறுகள்

மஹா துர்கை - நம்முள் ஏற்படும் விழிப்புணர்வு ஆகிய மூன்றாக சக்தி வழிபாடு குறிக்கிறது, பல்வேறு வடிவங்களில் உருவகம் செய்கிறது.

முப்பெரும் சக்திகளை வணங்குவதற்கு உரிய காலம் தான் ஆண்டு தோறும் வரும் புரட்டாசி மாத நவராத்ரி விழா.

முதல் மூன்று நாட்கள் துர்கையாக [பல வகை அம்மன்கள்], இரண்டாம் மூன்று நாட்கள் மஹாலக்ஷ்மியாக [அஷ்ட லக்ஷ்மிகள், பூமாதேவி], மூன்றாம் மூன்று நாட்கள் மஹாசரஸ்வதியாக, இறுதி நாளான பத்தாம் நாள் விஜயதசமி அன்று மஹாகாளியாக வணங்குகிறோம்.

அஷ்ட ஐஸ்வர்யங்களையும், பதினாறு பேறுகளையும் மனிதனுக்கு வாரி வழங்கும் சக்தியை ”கமலாத்மிகா” என்று கூறுவர்.அதையே தமிழகத்தில் கொங்கு தேசத்தில்  கிராமத்து மக்கள் ”செல்லாண்டி” - செல்வம் மண்டிய அம்மன் [அதிகமாக செல்வம் மண்டிக் கிடக்கும் அம்மை] என்ற பெயரால் தோற்றத்தால் வணங்குவது வழக்கம்.

விஜயதசமி அன்று நமது படிப்பறிவையும் கலை அறிவையும் விழிப்புணர்வையும் ஆரம்பிக்கிறோம் மற்றும்  மீண்டும் புதுப்பித்துக் கொள்கிறோம்.

ஒரே சூரியன் பல கண்ணாடித் துண்டுகளில் தனித்தனியாக ப்ரதிபலிப்பதைப் போல், ஒரே தெய்வீக சக்தி எல்லாப் பொருளிலும், உயிர்களிலும் நிறைந்துள்ள சமத்துவத்தைக் குறிப்பதே கொலு.

கொலு என்றால் அரசனின் கம்பீரமான தர்பார்.அன்னை மஹாசக்தி ஒன்பது நாட்களும் நமக்குள் கொலு அமர்கிறாள்.

நவராத்ரி விழாவைக் கொண்டாட சாதி, மதம் வேற்றுமை இல்லை.சக்தி அனைவருக்கும் பொதுவே! அனைவரையும் மதிக்க வேண்டும், அன்புடன் நடத்த வேண்டும், நம்மால் முடிந்த உதவிகளை யாவர்க்கும் செய்ய வேண்டும்.

அலைமகள் - கலைமகள் - மலைமகள் ஆகிய மூவரையும் செல்லாண்டி அம்மன் வடிவில் வணங்கினால் வேண்டியது எல்லாம் கிடைக்கும்.

ஸ்ரீராமன், கண்ணன், அர்ஜுனன், மஹாகவி காளிதாஸன், மஹாகவி பாரதி, கவிச்சக்ரவர்த்தி கம்பன், ஒட்டக்கூத்தர், காளமேகம், குமரகுருபரர் முதல் இக்கால இளையராஜா வரை அன்னையை வணங்கி வாழ்வில் வெற்றி வாகை சூடி உள்ளனர்.

நவராத்ரி காலத்தில் முப்பெரும் சக்திகளை முப்பெரும் தேவியராய் வணங்கி வாழ்வில் நிரந்தர மகிழ்ச்சியைப் பெற வாழ்த்துகிறோம்!

ஓம் சக்தி!