மாமதுரையில் நவராத்ரி...
 
எல்லாக் கோயில்களிலும் அன்னை ஆதிசக்தியை உயர் நவராத்ரிகளில் விதவித சக்தி வடிவங்களில் அலங்காரம் செய்து வழிபடும் போது எதிலும் வித்யாசம் காணும் பாண்டியர்தம் உயர் மாநகர், தமிழ் கெழு கூடல் மாநகராம் மதுரையில் உலகையே ஆளும் அன்னை மீனாக்ஷியின் நவராத்ரி மிக மிக வித்யாசம் ஆனது.
 
உலகின் பெரிய கொலு மதுரைக் கோயில் கொலு எனலாம்.
மிக ப்ரம்மாண்டமான கொலு பொம்மைகளை இங்கே காணலாம்.
அன்னையின் நவராத்ரி பூஜை கோலாகலமாக இருக்கும்.
கோயில் முழுவதும் வண்ண மின் விளக்குகள் அலங்காரம் செய்யும்.
 
அன்னை அங்கயற்கண்ணி முதல் நாள் உலகையை ஆளும் சக்தியின் உருவகமான ஸ்ரீராஜராஜேஸ்வரியாய் இருப்பாள்.
 
அதன் பின் அவள் தானும் பரம்பொருளான ஈசனும் வேறல்ல, இரண்டும் ஒரே ப்ரம்ம தத்வம் தான் என்று உணர்த்தும் வேத வாக்யத்தை உருவகம் செய்ய சிவனின் கோலத்தில் அலங்காரம் ஆவாள்.இது உலகில் வேறு எங்கும் இல்லாத ஒன்று.
 
தானே சிவம் [அஹம் சிவம் விவம் அஹம் சிவோஹம்]ஆன அத்வைத்த நிலையை மீனாக்ஷி உணர்த்துகிறாள்.
 
தானே சிவமாக பக்தியும் அத்துடன் இணைந்த அறமும் தன்னலமற்ற சேவையும் செய்ய வேண்டும்.அதை உணர்த்துவதே திருவிளையாடல் புராண நிகழ்வுகள்.
 
ஒவ்வொரு ஆண்டும் மிக முக்கிய லீலைகளை அலங்காரத்தில் காட்டுவர்.
 
எட்டாம் நாளில் மகிஷாசுரமர்த்தினியாகி, ஒன்பதாம் நாளில் சொக்கரை பூஜிக்கும் சிவசக்தியாக அலங்காரம் ஆவாள்.
 
இதில் கோலாட்டம் ஆடுவது போன்ற அலங்காரம் மிக அழகியது.
இருகோல்களை மாறி மாறித் தட்டுவது பரம்பொருள் பராசக்தியாக மாறி மீண்டும் சக்தி பரம்பொருளாக மாறும் தன்மையை உணர்த்தும்.
 
கரிக்குருவிக்கு ம்ருத்யுஞ்ச மந்த்ரம் உபதேசம் செய்தல்
நாரைக்கு முக்தி தருதல்
தருமிக்குப் பொற்கிழி கொடுத்தல்
அன்னக்குழியும் வைகை ஆற்றையும் உண்டாக்குதல்
கல்யாணக் கோலம்
பிட்டு மண் சுமத்தல் 
வளையல் விற்றல் ஆகிய லீலைகள் அலங்காரத்தில் வரும்.
 
பக்தியால் வாழ்வாதாரத்தை வளம் செய்க.
அதன் மூலம் குடும்பத்தையும் சமூஹத்தையும் இயற்கையையும் அறச் செயல்கள் மூலம் காத்திடுக.
அதுவே உயர் ஆன்மீகம்
தன்னலம் அற்ற சேவையால் தான் பரம்பொருளை உணர்தல் முடியும் என்று மீனாக்ஷி தன் உயர் நவராத்ரி அலங்காரத்தின் மூலம் உணர்த்துகிறாள்.
 
விஜய தசமி அன்று ஸ்ரீராஜ மாதங்கி [கல்வி கலை ஞானம் மூலம் உயர் முக்தி அருளும் சக்தி] வடிவில் உள்ள மதுரை மீனாக்ஷி கோயிலில் சரஸ்வதி முன் நூற்றியெட்டு வீணைகள் வாசித்து நாதாஞ்சலி செய்வது இவ்வூரின் பெருமைகளுள் ஒன்று.
 
ஊரே மாதங்கி மஹாயந்த்ர வடிவில் இருக்கும் மதுரையில் ஒரு முறையேனும் நவராத்ரி காண்க.