ஸ்ரீரங்கத்தில் நவராத்ரி...இல்லற நெறி உணர்த்தும் தாயார் திருவடி சேவை.
 
ஸ்ரீவைஷ்ணவ திவ்ய தேசங்களில் [பெருமாள் கோயில்கள்] தலையாய திவ்ய தேசம் ஸ்ரீரங்கம்.
ஸ்ரீராமனின் குல தெய்வமான ஸ்ரீரங்கநாதர் கோயில் கொள்ளும் திருத்தலம்.
இங்கு நவராத்ரியில் மஹாலக்ஷ்மியான ஸ்ரீரங்கநாயகித் தாயார் தினமும் மிகச் சிறப்பான முறையில் பல்லக்கில் புறப்பாடாகி, சன்னிதியை நிதானமாக வலம் வருவார், அதன் பின் நவராத்ரி கொலு மண்டபத்தில் கொலு வீற்றருள்வார்.
 
திவ்ய ஆடைகள், சகல அழகிய பாரம்பரிய திவ்ய நகைகள் சூடித் தாயார் செல்வத் திருமாமகளாய்க் காட்சி தருவார்.
 
கோயில் யானை [ஆண்டாள்] தாயாருக்கு முன் மாலை ஏந்தி மரியாதை செய்வதைக் காணக் கூட்டம் கூடும்.
 
எட்டு திசைகளை யானைகள் என சிற்ப சாஸ்த்ரம் உருவகம் செய்யும்.
எட்டு திசைகளிலும் அங்கீகாரமும் புகழும் சேர வேண்டும் என்று இரு யானைகளுடன் கூடிய கஜலக்ஷ்மி வடிவம் உணர்த்துகிறது.
 
சோழ தேசத்தில் பல கோயில்களில் தாயார் கஜலக்ஷ்மியாகவே அலங்காரத்தில் இருப்பார்.
 
ஸ்ரீரங்கத்தில் ஏழாம் திருநாள் [சப்தமி] அன்று தாயாரின் இரண்டு புனிதத் திருவடிகளும் வெளிப்படும் வண்ணம் அலங்காரம் செய்து இருப்பர்.இதற்குத் ’திருவடி சேவை’ என்று பெயர்.
 
தம்பதிகள் கல்யாணம் மூலம் இணைந்து இல்லறம் கண்டு குடும்பத்துக்கும் சமூஹத்துக்கும் பல்வேறு அறங்கள் செய்ய சப்தபதி மந்த்ரம் மூலம் உறுதி எடுத்துக் கொள்வர்.கணவன் போன அறவழியில் மனைவியும் செல்ல வேண்டும் என்ற உயர் கோட்பாட்டைக் காட்டவே இந்த அலங்காரம் செய்யப்படும்.
 
ஸ்ரீராமன் சென்ற சத்ய வழியில் சீதையும் பயணித்தாள்.
 
மேலும் வாழ்வாதாரத்தை அளிக்கும் பாக்ய சக்தியைத் தாயாரின் திவ்யமான திருவடிகள் மட்டுமே அளிக்கும், அதற்கு நம் மனதில் தீய எண்ணங்கள் அகல வேண்டும், அவள் பாதங்கள் பக்தியால் ஊன்ற வேண்டும்....
 
அன்று தாயார் கிளிகள் கொண்ட கிளிமாலையும் அணிவாள்.
 
கிளி - சத்யத்தின் அடையாளம்.சொன்னதையே சொல்லும் கிளி.அதாவது ப்ரபஞ்சத்தில் இருப்பது ஒரே பரம்பொருளான சத்யமே என்று அனைத்து சமய உண்மைகளும் கூறுவதையே கிளியின் குறியீடு எனக் கொள்க.
 
ஆழ்வார்கள் சன்னிதியில் உள்ள ஆண்டாள், உள் ஆண்டாள் ஆகியோரும் திவ்யமாகக் காட்சி தருவர்.
 
மதுரையை அடுத்து, ஸ்ரீரங்கம் பெரியகோயிலின் கொலு மிகவும் ப்ரஸித்து பெற்றது.
 
விஜய தசமி அன்று ஸ்ரீரங்கன் நம்பெருமாள் காட்டு அழகிய சிங்கர் கோயிலில் எழுந்தருள் வன்னி மரத்தின் மீது தீய சக்திகளை அழிப்பதன் குறியீடாக அம்பு எய்துவார்.
 
ஸ்ரீரங்கநாயகித் தாயாருக்கு வருடத்தில் ஐந்து அபிஷேகம் தான் உண்டு.அதில் ஒன்று நவராத்ரியில் வரும்.
 
செல்வத் திருமாமகள் ஸ்ரீரங்கநாயகித் தாயாரின் அருளால் வாழ்க்கை வளர்க...வளமுடன்...