மதுரைக் காஞ்சி

நூல் அறிமுகம்...

பாண்டிய நாட்டின் தலை நகரம் மதுரை ஆகும்.

அங்குள்ள உலகப் புகழ் பெற்ற கோயில் மீனாக்ஷி அம்மன் கோயில் ஆகும்.

அங்கு பொன் தாமரைக் குளம் உள்ளது. அவ்விடத்தில் தான் மூன்றாம் தமிழ்ச்சங்கம் நடந்தது.

அதில் 149 புலவர்கள் உறுப்பினர் ஆவர்.

அவர்களுள் 49 பேர் பெண்கள் ஆவர்.

தமிழ்ச்சங்கம் இன்றைய ஊடகங்களுக்கு ஒப்பானது.

அதில் புலவர்கள் பல ஊர்களில் இருந்தும் வருவர்.

மன்னர்கள், வீரர்கள், போர்கள், மனித வாழ்க்கை, சமுதாயத்தின் நன்மை-தீமைகள் ஆகியவற்றை இலக்கியம் மூலம் மக்களுக்குப் புலவர்கள் எடுத்துக் கூறினர்.

மூன்றாம் தமிழ்ச் சங்கத்தின் பாடல்கள் மொத்தம் 2081  கிடைத்துள்ளன.

அவை எட்டுத் தொகை - பத்துப்பாட்டு எனப்படும்.

பத்துப்பாட்டில் ஒன்று மதுரைக் காஞ்சி ஆகும்.

மதுரையின் பெருமையைப் பற்றி மன்னன், மக்கள், வெளியூர் மக்கள், வணிகர்கள், பயணியர் ஆகியோருக்கு விளக்குவதாக இந்நூல் அமைகிறது.

மேலும் சேர்த்து வைத்த செல்வம் நிலை இல்லாதது என்பதை உணர்த்துகிறது.

2000 அண்டுகளுக்கு முன் மதுரை மாநகரம் எப்படி இருந்தது என்று சங்கப்புலவர் மாங்குடி மருதன் அப்படியே கண்முன் கொண்டு வந்து வர்ணிக்கிறார்......

மதுரை மாநகரம் மிகவும் பழமையான நகரங்களில் ஒன்று.

அவ்வூர் பாண்டிய மன்னர்களின் பழமையான தலைநகரம் ஆகும்.

மதுரை வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

மதுரையின் மேற்குப் புறத்தில் உள்ள ஆண்டிப்பட்டி - வர்ஷ நாடு மலைத்தொடர்களில் வைகை உற்பத்தி ஆகிறது.மேலும் கம்பம் பள்ளத்தாக்கு வழியே கேரளத்தின் முல்லைப் பேரியாற்றில் இருந்து வரும் தண்ணீர் இதனுடன் சேர்கிறது.

வைகைக் கரையை அடுத்து அடர்ந்த சோலைகள் சூழ்ந்த திருமருதந்துறையில் உழவர்கள், பாணர்கள், குயவர்கள், நெசவாளர்கள் வாழ்ந்தனர். இது ”பெரும்பாணர்ச் சேரி” எனப்பட்டது.அப்பகுதியே இன்று ஆரப்பாளையம் ஆகும்.

அச்சேரிக்கு அடுத்ததாக மிகப்பெரிய ஆழமான அகழிகள் இருந்தன. அதில் பல முதலைகள் இருந்தன.அதை ஒட்டி மிக உயரமான மிகப்பழமையான கோட்டை மதுரை நகரைச் சுற்றி அமைந்துள்ளது.

கோட்டையின் முக்கிய வாயிலின் மீது ஒரு அழகிய மாடத்தில் துர்கையின் சிலை அமைக்கப்பட்டு வழிபடப்பட்டது.கோட்டையின் மேல் ஆயுதங்களுடன் வீரர்கள் இரவு பகலாக மதுரையைக் காவல் செய்தனர்.

கோட்டைக்குள் வைகையைப் போன்ற நீண்ட அகலமான சாலைகள் அமைந்துள்ளன.

ஊரின் நடுவில் சிவனுடைய கோயில் [இன்றைய மீனாக்ஷி அம்மன் கோயில்] அமைந்துள்ளது.அதன் அருகிலேயே சற்றுத்தொலைவில் பாண்டிய மன்னரின் அரண்மனையும் அரசு அதிகாரிகளின் இருப்பிடங்களும் உள்ளன. [இன்று திருமலை நாயக்கர் மஹால் உள்ள இடம்]

வைகையாற்றில் மலர்ந்த தாமரைப்பூப் போல் மதுரை அழகாக உள்ளது.அது மஹாவிஷ்ணுவின் கொப்பூளில் இருந்து தோன்றிய தாமரை போல் உள்ளது.அதன் நடுவில் பூவின் பொகுட்டு போல் கோயிலும், தாமரை இதழ்களைப் போல் தெருக்களும் உள்ளன.

தாமரையைச் சூழும் வண்டுகள் போல் சதா உள்ளூர் மக்களும் வெளிதேசத்து வியாபாரிகளும் மதுரையில் கூடி உள்ளனர்.மக்களின் சத்தம் எப்போதும் கேட்கிறது.பல தேசத்து வியாபாரிகள் பேசும் பல மொழிகள் கலந்து ஒலிக்கின்றன. கோயில்களில் எப்போது ஏதாவது ஔ விழா கொண்டாடப்படும் ஒலியும் கேட்கிறது. [இன்றும் மதுரையில் 250 நாட்களுக்கும் மேல் விழாக்கள் நடைபெறுகின்றன]

விழாக்களில் ஆடிப்பாடி மகிழ்விக்கும் கலைஞர்கள் மதுரையில் சூழ்ந்துள்ளனர்.

ஓணத்திருவிழாவின் போது யானைச் சண்டைகள் நடைபெற்றன.

பல மாடிகள் கொண்ட பெரிய வீடுகளும் சிறிய வீடுகளும் மதுரையில் உள்ளன.

பெரிய மிருகக் காட்சிச் சாலை மதுரையில் மக்களின் பார்வைக்காக உள்ளது.

சிவன், பெருமாள், முருகன், துர்கை, புத்தர் மற்றும் சமண மதக் கோயில்கள் பல உள்ளன.மக்கள் வேளை தவறாது அங்கே சென்று இறைவனை வணங்கினர்.

வடமொழி வேதங்கள் கற்றுத்தரும் வேதபாட சாலையும் மதுரையில் அமைந்துள்ளது.

மன்னன், அமைச்சர், படைத்தலைவர்கள், வீரர்கள், நீதிபதிகள், அரசு அதிகாரிகள், அலுவலர்கள், வணிகர்கள், மருத்துவர், ஆசிரியர்கள், பல தொழில் செய்வோர், கலைஞர்கள் எனப் பலதரப்பட்ட மக்களும் மதுரையில் வாழ்ந்தனர்.

விடியலில் கோயிலின் மணி, முரசம், வாத்தியங்களின் ஒலிகளும், வேத மந்திர முழக்கமும் கேட்கின்றன.அனைத்து மதக் கோயில்களிலும் பூஜைகள் செய்யும் ஒலி கேட்கிறது.

அரசனின் அரண்மனையில் அவனை வாழ்த்தும் பாடலும் முரசும் ஒலிக்கிறது.

கோழிகளும் சேவல்களும் கூவின.பெண்கள் வீட்டைக் கூட்டி, வாசலை சுத்தம் செய்தனர்.

மதுரையில் இரண்டு பெரிய கடைத்தெருக்கள் உள்ளன. நாள் அங்காடி - அல் அங்காடி என அவை கூறப்படும். அங்கே மக்கள் குழுமி வியாபாரம் செய்வர்.

விலையை அறிவிக்கும் பதாகைகள் இருந்தன. உணவகத்தைக் குறிக்கும் கொடிகள் பறந்தன.

ஆசிரியர்கள் மாணவர்களுடன் அமர்ந்து கற்பிக்கும் கல்விச் சாலைகள் பல மதுரையில் இருந்தன.

சன்யாசிகள் வாழும் மடங்கள் தனியாக இருந்தன.

போர் வீரர்கள் ஓய்வெடுக்கும் சத்திரங்களும், அன்னதானக்கூடங்களும், ஆதரவு அற்றவர்களுக்கு உதவும் கூடங்களும் மதுரையில் இருக்கின்றன.

தேர்கள், யானைகள், குதிரைகள் ஆகியன போக்குவரத்துக்குப் பயன்பட்டன.

பல்வேறு தின்பண்டங்கள், பூக்கள், சுண்ணம், வெற்றிலை பாக்கு, அப்பம், மீன், புட்டு, பழங்கள், தேனில் ஊறிய பலாப்பழம் ஆகியன விற்போர் வீதிகளில் கூவிக்கூவி விற்றனர்.

அழகிய ஓவியங்கள் விலை கூறி விற்றப்பட்டன.

அழகிய பூ வேலைப்பாடு அமைந்த மெல்லிய ஆடைகளை மக்கள் பருவகாலம் அறிந்து அணிந்தனர்.ஆடைகள் மீது இலைகளையும் பூக்களை தொடுத்து சுற்றிக் கொள்ளும் வழக்கம் இருந்தது.ஆண்களும் பெண்களும் மலர்கள் சூடும் வழக்கம் இருந்தது.வேப்ப இலை மாலையும், பூமாலையும் சூடினர். மக்கள் மிக்க ஆர்வத்துடன் தங்களை ஒப்பனை செய்து கொண்டனர்.

கற்றவர்கள் விவாதம் செய்து மக்களுக்குப் பல கருத்துக்களைக் கூறும் தர்க மண்டபங்கள் இருந்தனர் [பட்டி மன்றம்]

வெள்ளி, தங்கம், சங்கு, மண், செம்பு, மணி வகைகள் ஆகியவற்றால் செய்த அணிகலன்களை மக்கள் பயன்படுத்தினர்.

வீடுகளின் மாடிகளின் இருந்து கோயிலை வணங்கினர்.

மாலை வேளைகளில் மக்கள் வீடுகளில் விளக்குகள் ஏற்றி வழிபட்டனர், கோயில்களுக்குச் சென்றனர்.கலை நிகழ்ச்சிகளுக்கும் சென்றனர்.

பாண்டிய மன்னன் தினமும் தவறாமல் தன் சபைக்கு வந்து நாட்டின் நலத்தையும் மக்களின் தேவைகளையும் அறிந்து அரசு செய்வான்.

இரவில் காவலர்கள் நூல் ஏணிகள் வைத்துக் கொண்டு புலிகள் போல் காவல் காத்தனர்.