நவராத்ரி சிறப்புக் கட்டுரை
பரம்பொருள் பராசக்தியாக மாறுகிறது
பராசக்தி ஐம்பூதங்களாக மாறுகிறது
ஐம்பூதங்களின் கூட்டுச் சேர்க்கையால் ப்ரபஞ்சம் - பரந்த பஞ்ச பூத வெளி உருவானது
அதில் சூரியக் குடும்பத்தில் பூமியின்கண் உயிர்கள் தோன்றின.
அவற்றுள் மனிதன் உயர் பரிணாமத்தில் இருக்கிறான்.
மனிதனின் அன்றாடத் தேவைகள் ஏராளம்.
ஆனால் பிற உயிர்களுக்கு உணவும், உறைவிடமும், இனப்பெருக்க்மட்டுமே தேவை
அதனால் அவை நேரடியாகவே இயற்கை சக்தியில் இருந்து வாழ்வாதார சக்தியை க்ரஹித்துக் கொள்ள முடியும்.
மிக அதிகம் தேவையுள்ள மனிதனுக்கு அது இயல்வதில்லை.
அதனால் ப்ரபஞ்ச பராசக்தியை அவன் தன் பாக்ய சக்தியாக்கிட முனைந்தான்.
அதைப் பெண்மையாக உருவகித்தான், மதித்தான், உண்மை உணர்ந்தான், பல்வேறு சடங்குகள் மூலம் சக்தியை க்ரஹித்துப் பயன்படுத்தினான்.அவை தான் சமயச் சடங்குகள்.
குமரிக் கண்டத்தின் தோன்றிய ஆதி மனிதன் ப்ரபஞ்ச சக்தியான பெண்மை வணங்கி மதித்து நன்றி கூறும் தருணம் தான் நவராத்ரி விழா.
உலகில் நீண்ட விழா, பத்து இரவுகள் கொண்டாடப் படும் விழா.
அலைப்பேசியை ரீ சார்ஜ் செய்து கொள்வது போல் ஆண்டுக்கு ஒரு முறை நம் வாழ்வாதார சக்தியை ரீ சார்ஜ் செய்யும் பத்து இரவுகள் மிக உன்னதம் ஆனவை.
தச ராத் - பத்து இரவுகள்
நவராத்ரி - ஒன்பது இரவுகள்
இரவில் தான் மனிதன் மிக்க கவனத்துடன் இருப்பான்.
வாழ்க்கையே அறியாமை என்ற இருள் சூழ்வதால், அதில் ஞானம் என்ற விளக்கின் வெளிச்சம் கொண்டு வாழ நவராத்ரிகள் உதவுகின்றன.
______________________________________
ப்ரபஞ்ச சக்தியைப் பெண்மை என உணர்ந்த மனிதன் அதன் மூன்று மிக முக்கியமான இயக்கங்களை உணர்கிறான்.
தோற்றுவித்தல்
பாதுகாத்தல்
மாற்றுதல்
ப்ரபஞ்சத்தில் சதா எக்காலமும் இம்மூன்று செயல்களும் நிகழ்ந்த வண்ணமே உள்ளன.
இம்மூன்று செயல்களையும் செய்யும் ப்ரபஞ்ச சக்தியை மனிதன் மஹாசரஸ்வதி, மஹாலக்ஷ்மி, துர்கை என்று உருவகம் செய்தான்.
அனைத்தும் ஒருங்கிணைந்த சக்தியே மஹாகாளி.
உலகம் முழுவதும் மிகத் தொன்மை மிக்க மனித நாகரிகங்கள் பெண் தெய்வ வழிபாட்டைக் கைக்கொண்டன.
அவற்றுள் பாரத தேசத்தில் காலம் காலமாகப் பெண் தெய்வ வழிபாடே மேலோங்கி இருக்கிறது.
நவராத்ரியின் ஒன்பது நாட்களில் மேற்கண்ட மூன்று சக்திகளையும் பிரித்து வணங்குகிறோம்.இறுதி ராத்ரியில் [பத்தாம் நாள்] மஹாகாளியை வணங்குகிறோம்.
____________________________________________
மனிதனின் மனதுள் உள்ள பல்வேறு தீய எண்ணங்களை அசுர சக்திகள் என்று புராணங்கள் அனிமேட் செய்யும்.
பேராசை, பொறாமை, அகம்பாவம், கருமித் தனம், சோம்பல், புறம் கூறுதல், கோபம் ஆகிய மிகத் தீய சக்திகள். இவை செயல் வடிவம் பெறுகையில் வாழ்வாதார சக்தி குறைந்து விடும்.இத்தீய சக்திகள் மனதுள் எழும் போது தூய அறிவால் அதை எதிர்த்து வெளியேற்றுவதையே அன்னை பராசக்தி பல்வேறு அசுரர்களுடன் போராடுவதாக முன்னோர் உருவகம் செய்வர்.
ஒவ்வொரு நாளும் பூஜையில் மனதுள் இவை வரின், அவற்றை அழிக்கும் ஞான சக்தி வேண்டும் என்று வேண்டுக.
____________________________________________
கொலு
நவராத்ரியை பாரத தேசம் முழுவதும் பல்வேறு முறைகளில் கொண்டாடுகிறோம்.
யாரும் கொண்டாடலாம், எவரும் கொண்டாடலாம், மனம் தான் வேண்டும்.
தமிழகத்தில் கொலு என்ற அமைப்பு முறையில் நவராத்ரி கொண்டாடப்படுகிறது.
அரசன் அவையில் வீற்றிருக்கும் காட்சியே கொலு.
ஆதிபராசக்தி நம் வீட்டில் நம் மனதில் கொலு இருக்க வேண்டும்.
பொம்மைகள் என்பன ப்ரபஞ்ச சக்தியின் அனைத்துத் தோற்ற வடிவங்களையும் சுட்டும்.
இதன் மூலம் அனைத்துள்ளும் எவருள்ளும் எதுவுள்ளும் ஆதிசக்தியே ஆதார சக்தியாகிறது என்ற அறிவியல் கோட்பாட்டை உணர்க.
அனைவரையும் அன்புடன் மதித்திடுக, உதவுக.
_______________________________________________
முதல் மூன்று நாட்கள் - துர்கை
சிவப்பு நிறம் கொண்ட பூக்கள், வேப்பிலை, குங்குமம், ஆடை கொண்டு அலங்கார பூஜைகள்
அடுத்த மூன்று நாட்கள் - மஹாலக்ஷ்மி
பொன் நிற மலர்கள், செந்தாமரை, வில்வம் [பொன் தாது கொண்டது], மஞ்சள் கொண்டு பூஜைகள் செய்க.
சப்தமி - அமாவாசையின் ஏழாம் நாளி கல்வி கேள்வி கலைகள் ஞானத்தின் சக்தியான மஹாசரஸ்வதியை த்யானம் செய்ய வேண்டும்.அன்று முதல் மூன்று நாட்கள் சரஸ்வதி.மூன்றாம் நாளான நவமி [ஒன்பதாம் நாள்] மஹாநவமி ஆகும்.அன்று சரஸ்வதி பூஜை.
வெண்மை வண்ண மலர்கள், வெண்தாமரை, சந்தனம், வெண்பட்டு கொண்டு அலங்கார பூஜைகள் செய்க.
மூல நட்சத்திரம் வரும் நேரம் பார்த்துப் புத்தகங்கள், கலைப் பொருள்கள், கருவிகள் ஆகியவற்றை ரீ ஜார்ஜ் செய்ய பூஜையில் வைத்திடுக.சரஸ்வதி பூஜை அன்று பூஜித்து பத்தாம் நாள் விஜய தசமி அன்று எடுத்து மீண்டும் உபயோகம் செய்க.
எட்டாம் நாள் மஹா அஷ்டமி.அன்றே அன்னை துர்கை மகிஷாசுரனை [முழுமொத்த ஆணவத்தின் குறியீடு] அழிக்கிறாள்.இவளே கொற்றவை.இவளையே அதிகம் மக்கள் வணங்குகிறார்கள்.
விஜய தசமி அன்று நெல் அல்லது பச்சரிசி பரப்பி அனைவரும் மீண்டும் எழுதலாம்.உங்கள் தொழில் சார்ந்த ஒரு காரியத்தைத் திட்டம் இடுக.உங்கள் ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள், கலைத்துறை குருக்கள், ஆன்மீக குருக்கள் ஆகியோருக்கு மரியாதை செய்க.
அன்று இரவு மஹாகாளியை த்யானித்து இரவில் கொலுவிற்கு ஆரத்தி காட்டி த்ருஷ்டி கழித்து முடித்துக் கொள்க.
பத்து நாட்கள் கொலு முடியாவிடின் 9, 7, 5, 3, 1நாள் கொலு வைப்பதும் ஏற்பு உடைத்தே.
எச்சாதியினரும் இதைச் செய்ய உரிமை உண்டு, செய்கிறார்கள் உலகம் முழுவதும்.ஏன் வேற்று மாநிலத்தவர் கூடச் செய்வர்.
பத்து நாட்களும் கலசத்தில் அன்னையை த்யானித்து அவளை அர்ச்சித்தாலும் பலனே.
ஒரே ஒரு பொம்மைக்கு அலங்காரம் செய்வோரும் உண்டு.
பிள்ளையார், கலசம், துர்கை, லக்ஷ்மி, சரஸ்வதி மட்டும் வைப்போரும் உண்டு.
கலைத் திறனைக் காட்டுக, குழந்தைகளின் திறன்களை வெளிக்கொணர்க.
இவ்வாண்டு நவராத்ரி அக்டோபர் 10 அன்று ஆரம்பம்.
ஆனால் மாஹாளய அமாவசை 8 அன்று வர, அன்றே நல்ல நேரம் பார்த்துக் கலசம் வைத்து, கொலு அமைத்துக் கொள்க.
ப்ரபஞ்ச சக்தியான பெண்மையை வணங்கி உங்கள் வாழ்வாதார சக்தியைப் பெருக்கிக் கொண்டு வளம் பெறுக, சமூஹ நலன் பேணுக.