மரீனா கடற்கரை
மதராஸின் மிக முக்கிய சுற்றுலா இடங்களில் ஒன்று மரீனா கடற்கரை. வருடம் முழுவதும் ஏதொ ஒரு ஊர் மக்கள், சுற்றுலாக் கூட்டம் காலை, பகல், மாலை வேளைகளில் இங்கு இருக்கிறது.ஆதரவற்ற, வீடற்றவர்கள் பலரும் ”வானமே கூரையாக” உறங்குவதும் இங்கு தான்.
பஜ்ஜி, சுண்டல், பூக்கள் விற்றே படித்துப் பட்டம் பெற்றவர்களும் உண்டு.
இன்று எத்தனையோ சிறுவியாபாரிகளுக்குச் சோறு போடும் கடற்கரை இது.
அன்று புனித தாமஸ் கால் வைத்து, ஆன்மீகப் பணியாற்றி, ஜீவசமாதி மேற்கொண்ட சாந்தோம் இக்கடற்கரையின் ஒரு அங்கம் தான்.
காலம் காலமாகப் பல தேசத்து மக்களையும், கப்பல்களையும் வரவேற்ற கரை, பல கடல் வழித் தாக்குதல்களைப் பார்த்த கரை, இன்று உழைப்பாளர் முதல் கல்விக் கண் கொடுத்த முதல்வர் காமராசர் வரை உயர்ந்தோர் சிலா ரூபத்தில் கொலுவிருக்கும் கரை, மஹாகவி பாரதியாரின் பாடல்களும் வீர சொற்பொழிவுகள், பாதச் சுவடுகளும் பதிந்த கரை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் மாசிமகம் அன்று கடலாடும் கரை, காதலர்களின் கரை, சினிமாக்களுக்குக் கதை சொல்லும் கதை, சோகத்தைத் திசைத் திருப்பும் கரை, உடற்பயிற்சிக்கு இடம் தரும் கரை, காணும் பொங்கலன்று மக்கள் கூட்டம் அலை மோதும் கரை, கோடை விடுமுறைக்கென்றே இயற்கை தயாரித்த விளையாட்டுக் கரை, அண்ணாதுரையும், மக்கள் திலகம் எம்.ஜி.ராமச்சந்திரனும் நீள்துயில் கொள்ளும் கரை, ஆழிப்பேரலைகளின் போது அதிகம் உயிர்ப்பலி கொள்ளாத கரை....கடல் அன்னையின் புகழ் இவை.
சுமார் 13 கிலோமீட்டர் நீள வாக்கில் கோட்டை முதல் அடையாறு வரை மரீனா அமைகிறது.உலகில் இரண்டாம் நீளமான கடற்கரை, ஆனால் சுத்தம் வேண்டும்.
கோட்டைக்கு எதிரே அமைந்த கடலை எவ்வளவு தூரம் ஆங்கிலேயன் ரசித்தான் என்று தெரியவில்லை.காரணம் பல தேசத்துப் படைகள் எப்போது வேண்டும் ஆயினும் கோட்டையைத் தாக்கும் அபாயம் தான் இருந்துள்ளது.
ஆனால் மதராஸின் மிக முக்கிய சில இடங்கள் இக்கரையின்கண் அமைந்தன.
கமிஷ்னர் அலுவலகம், ஐஸ் ஹவுஸ், ராணி மேரிக்கல்லூரி, இன்றைய கலங்கரை விளக்கு, இந்திய வானொலி, தூர்தர்ஷன் தொலைக்காட்சி, பல்கலைக்கழகம், ப்ரெஸிடென்ஸிக் கல்லூரி ஆகியன அக்கால வாசனையுடன் இன்றும் உள.
கூவம் ஆறு கடலுடன் சங்கமிக்கும் இடத்தை நேஃபியர் பாலத்தில் இருந்து ரசிக்கலாம்.
கூவத்தின் அருகில் சென்று தொலைதூரப் பார்வை செலுத்த மாநகரம் பழைய சாயலில் இன்றும் தரிசனம் தருவதைக் கண்டேன்.
மயிலை-திருவல்லிக்கேணியின் கடல் இந்த மரீனா தான்.
கி.பி 16ஆம் நூற்றாண்டில் சில மணல் மேடுகளும், உப்பங்கழிகளும் கடற்கரையில் இருந்தன.
காலத்தின் போக்கில் அதீத புயல்மழைக் காரணமாகக் கடலின் போக்கு மாறி வருவதைக் காண்கிறோம்.
இன்று கடல் தூரமாக உள்ளது. கோட்டை எழுப்பப்பட்ட காலத்தில் அலைகள் கோட்டை மீது கூட படும் அளவுக்கு அருகில் கடல் இருந்துள்ளது.
1944ல் சாலைக்கு அருகில் இருந்ததாக என் அம்மாவின் அப்பா கூறினார், அவர் ப்ரெஸிடென்ஸியில் படித்தவர்.
கோட்டையுடன் சேர்த்து, மணல் மேடுகளையும் கூவத்தின் அதிரடி வெள்ளப் போக்கையும் சமாளிக்க வேண்டிய சவாலும் ஆங்கிலேயருக்கு இருந்தது.
இக்கடற்கரையின் மீனவர்க் குடிகள் தான் உண்மையான பழம்பெரும் சென்னைவாசிகள்.அவர்தம் நிலங்களை நாயக்க மன்னன் ஆங்கிலேயருக்குக் கொடுத்தார் என்பது வரலாறு. பூம்புகாரைப் போலவே இங்கும் மீனவரி பட்டிணப்பாக்கம் உள்ளது.
கி.பி 1881ஆம் ஆண்டில் தான் முறையான துறைமுகம் கோட்டையின் வடக்குக் கடல் பகுதில் எழுப்பப் பட்டது.
கி.பி 1870ல் மதராஸ் வந்தார் ஆங்கிலேய அதிகாரி மவுண்ட் ஸ்டார்ட் எலிஃபின் ஸ்டோன்.இவர் கி.பி 1881 - 1886 வரை கவர்னராக இருந்த காலத்தில் தான் துறைமுகம் கட்டப்பட்டது.மேலும் கடற்கரை மரீனா என்று பெயர் பெற்றது. மரீனா - கடல் புறத்தே - OF THE SEA என்று பெயர்.கி.பி 1884ல் இவர் தரமான கடற்கரைச் சாலையை உருவாக்கினார்.
ஆனால் நேற்று கோட்டையின் அருங்காட்சியகத்தில் உள்ள ஃப்ரெஞ்சின் தேசிய தேவதை மரீனேவைப் பார்த்தது முதல் மேல் சொன்ன சரித்திரம் என்னுள் மீண்டும் மாறுபட்டது.
OF TE SEA என்று கூற வேண்டியது இல்லை.
ஃப்ரெஞ்சு தேவதையின் பெயருக்கு - ”சுதந்திரம் மற்றும் பகுத்தறிவின் சக்தி” என்று பொருள்.
மூன்று ஆண்டுக் காலம் ஃப்ரெஞ்ச் கோட்டையை வசம் கொண்டு மதராஸை ஆண்ட காலத்தில் அவர்தம் தேசிய தேவதையின் பெயர் கடல் அன்னைக்கும் சூட்டப்பட்டுள்ளது.
கடல் என்பது உயர்ந்த ஆளுமையின் சின்னமும் கூட அல்லவா?
கடற்கரையில் முதல் மீன் காட்சி அகம் - கி.பி 1901ல் தொடங்கப்பட்டது.
கடற்கரையில் காணும் உழைப்பாளர் சிலை, காந்தியின் தண்டி யாத்திரை ஆகியன சென்னை அரசு கலை ஓவியக் கல்லூரியின் முதல் முதல்வர் டெபி ராவ் செளத்ரியால் உருவானவை.1968ல் முதல் உலகத் தமிழ் மாநாட்டை ஒட்டிப் பலத் தமிழறிஞர்தம் சிலைகள் கடற்கரையின் நெடுகிலும் வைக்கப்பட்டன.
வீரமாமுனிவர், ஒளவை, பாரதியார், பாரதிதாசன், கம்பர், திருவள்ளுவர், அண்ணா சமாதியில் இளங்கோவடிகள், கண்ணகி, கார்ட்வெல் சமீபத்தில் நடிகர்த் திலகம் சிவாஜி கணேசன் எனப் பலர் மரீனாவின் காற்றை நுகர்கிறார்கள்.