மயிலை - திருவல்லிக்கேணி கண்டேனே...
மதராஸ் என்பது புதிது.ஆனால் அதன் உதிரி பாகங்களான ஊர்கள் மிகப் பழையன.
திருவொற்றியூர், திருமயிலை, திருவல்லிக்கேணி, திருவான்மியூர், பல்லாவரம் [பல்லவபுரம்], கோட்டூர்புரம், வடமுல்லைவாயில், பாடி, எழுமூர் [எக்மோர்] குன்றத்தூர், கோவூர், மாங்காடு போன்ற பல ஊர்கள் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிறு நகரங்களே!
அவற்றில் உள்ள திருக்கோயில்களை பக்தி இலக்கியத்தில் நம் தெய்வீகப் பெரியோர்கள் பதிவு செய்துளர்.
மதராஸின் திருமயிலையில் பேயாழ்வாரும் வாயிலார் நாயனாரும் வாழ்ந்தனர்.
திருவான்மியூரை அப்பர், சம்பந்தர், அருணகிரியார் பாடினர்.
திருமயிலையைச் சம்பந்தர் பாடினார், அருணகிரியாரும் போற்றிப் பதிவாக்கினார்.
திருவல்லிக்கேணி பெருமாளைப் பேயாழ்வாரும் திருமழிசையாழ்வாரும் திருமங்கையாழ்வார் போற்றினர்.
திருவொற்றியூரை அப்பர், சம்பந்தர், சுந்தரர், பட்டிணத்தடிகள், அருணகிரியார், வள்ளலார் எனப் பலரும் தம் பக்தி இலக்கியங்களில் போற்றிப் பதிவாக்கினர்.
தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலங்களே மொத்தம் ஏழு உள்ளன.
அவற்றுள் மயிலை [மயிலாப்பூர்] - திருவல்லிக்கேணி பழங்காலத்து இரட்டை நகரங்கள்.
அவை இரண்டும் மதராஸின் கோட்டைக்கு அருகில் அமைந்தவை. முதன்முதலில் மதராஸுடன் இணைக்கப்பட்ட ஊர்கள் இவையே.
மயிலை சங்ககாலத்தில் துறைமுகமாக விளங்கியது. [புனித தாமஸ் ஆய்வுப் பகுதியில் அதிகத் தகவல்கள் உள]
மாமல்லபுரத்துக்கும் முந்தைய துறைமுகப் பட்டிணம் மயிலை.
புனித தாமஸ் இங்கு இருந்து கிழக்கத்திய தேசங்களுக்கும் செல்ல எண்ணியிருக்கிறார், அதனால் தான் இங்கு வந்தார்.
திருவள்ளுவரின் பிறப்பும் வாழ்வும் மயிலையில் தான்!
கலிங்கத்துப் பரணி இலக்கியம் ”பண்டை மயிலையும் பாடீரே” என மயிலையின் சிறப்புகளைக் கூறும்.நந்திக் கலம்பகமும் இவ்வூரைக் குறிக்கின்றது.
கி.பி 16ஆம் நூற்றாண்டு வரை மயிலையில் கப்பல் போக்குவரத்து இருந்தது. குறிப்பாகப் போர்த்துகீஸியர் மீண்டும் மீண்டும் வந்துள்ள இடம் இது.
இன்று உள்ள கபாலீச்சுரம் அன்று கடற்கரையில் இருந்தது, கடல்கோளாலும், போர்த்துகீஸிய மத வேற்றுமை குணத்தாலும் இன்றுள்ள இடத்துக்குப் புலம் பெயர்ந்தது. தமிழகத்தில் ஆதிகாலத்தில் மக்கள் கொண்டாடிய விழாக்கள் என்னென்ன என்று இக்கோயில் தேவாரம் மிகத் துல்லியமாகப் பதிவு செய்துள்ளது.
பல இலக்கியங்களும் இவ்வூரைப் பதிவு செய்துள்ளன.
மயிலைக் கபாலி கோயில் இன்றுள்ள இடத்துக்கு வந்ததன் காரணம் போர்த்துகீஸியரின் படை எடுப்பாலும் இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.
ஃப்ரெஞ்ச் வீரர்கள் தம் கைவரிசையைக் காட்டிய கோயில் இது.இரு மாபெரும் கோயில் கொள்ளை நிகழ்ந்துள்ளன.
கி.பி பதிமூன்றாம் நூற்றாண்டு - மூன்றாம் குலோத்துங்கனின் அதிகாரிகளுள் ஒருவன் எல்லப்பர் பிள்ளை.இவன் தன் மகன் திருமலை தேவமகராசனின் நலனுக்குகாக இன்றைய மதிலை எடுத்தான்.
மற்றொரு அதிகாரி இருபத்திரண்டு ஆடுகள் தானம் செய்துள்ளனன்.
கி.பி 1810 - அய்யா முதலி என்பவர் தான் கோயில் தர்மகர்த்தாவாக இருக்க வேண்டும் என்று அவரது நாணத்தை விளக்கி ஆங்கிலேயரிடம் மக்கள் விளக்கி அவரையே தலைவர் ஆக்கியுள்ளனர்.
கி.பி 1896 - மயிலாப்பூர் ராக்கியப்ப முதலியார் வீதி, கதவு எண்: , சுப்பராய முதலியின் மகன் ஆறுமுக முதலி தன் தோட்ட வீட்டைக் கோயிலுக்கு எழுதினார்.அதன் மூலம் வரும் வருவாயில் பங்குனி விழா முதல் நாள் கொடி ஏற்ற தினத்தின் இரு வேளை உற்சவங்களுக்கு உரிய பணமும், இரவில் அனாதைகளுக்கும் பயணிகளுக்கும் தரமான மிளகு சாதம் தரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் விலைமிக்க மூவாயிரம் ரூபாய் மதிப்புள்ள ரத்தினக் கற்கள் கொண்ட காதணி கபாலீஸ்வரருக்கு அவர் அளித்தார்.
மயிலை முண்டகக்கண்ணியம்மன், கோலவிழி அம்மன் ஆகியன ஆதிகாலத்து ஊரின் காவல் தேவதைகள்.
ராமக்ருஷ்ண மடச்சாலை வினாயகர் கோயில், செல்வ வினாயகர் கோயில் ஆகிய முன்னூறு ஆண்டுகள் பழமை கொண்டவை.
சமண வழிபாட்டு ஸ்தலமும், ஏசுவின் மாணவர் புனித தாமஸின் ஜீவ சமாதியும் மயிலையில் உள்ளன.
மதராஸின் முதல் மேற்கத்திய சர்ச் லஸ் சர்ச்.இது இன்றைய போர்த்துகீஸியரின் சாந்தோம் சர்ச்சுக்கும் முந்தியது.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் மிகத் தொன்மையானவர்.அவருக்குப் பெரிய உருட்டு விழிகளும் மீசையும் உண்டு.மஹாபாரதப் போரில் பங்கேற்ற வடிவில் கீதை சொன்ன கோலத்தில் க்ருஷ்ணன் பார்த்தசாரதியாக உள்ளார், மிகப்பெரிய திருமேனி.
உத்ஸவர் முகத்தில் பல நூறு வார்ப்பு வடுக்கள் உள்ளன.
”ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து புலியூர்க் கோட்டத்து எழுமூர் [எழும்பூர் - எக்மோர்] நாட்டுத் திருவல்லிக்கேணி” - என்று முகவரி அடையாளம் தரப்பட்டுள்ளது. [கி.பி 13]
கி.பி 5ஆம் நூற்றாண்டில் பேயாழ்வார் தம் ஒரே பாடலில் ”திருவல்லிக்கேணி” என்றே பெயர்ப் பதிவு செய்கிறார்.
கி.பி 808 ஆம் நூற்றாண்டில் தந்தி வர்ம பல்லவனின் கல்வெட்டு மூலம் இதன் தொன்மை புரியும்.
மூலஸ்தானத்தின் வடக்குப் பகுதியில் இக்கல்வெட்டு உள்ளது என்ன கூறுகிறது?
”இவ்வூரின் நிலவந்தர்கள் கோயிலின் சொத்தான வயல்களை அடகு வைத்து விட்டனர்.அதற்கு வட்டியாக 45 கிலோ நெல்லையும் கொடுத்திட, கோயிலில் ஆறுகாலப் பூஜைக்கு நைவேத்யம் செய்யப் போதிய நெல் இல்லை! [ஊர் சொத்தைக் கொள்ளை கொள்வது புதிதல்ல]
ஆனால் அவ்வயல்களைப் புகழ்த்துணை விசை அரசன் என்பவன் முப்பது கிலோ நெல்லும், ஐந்து பவுன் பொன்னும் கொடுத்து வாங்கினான்.அவனது அலுவலர்கள் மூவர் - சங்கமன், சட்டி சர்மன், இளைய சட்டி சர்மன் ஆகியோர் அந்நெல் தரும் தூய குத்தல் அரிசியைக் கொண்டு பார்த்தசாரதி பெருமாளுக்கு இரவு காலப் பூஜையிலும் அமுது செய்வித்தனர்.
இலங்கையில் செய்யப்பட்ட விளக்கும், அமுது செய்விக்கும் அழகிய பாத்திரமும், தட்டம் ஒன்றும் இவனால் பார்த்தசாரதி பெருமாளுக்குத் தரப்பட்டன” - ஈழ விளக்கு மயிலைத் துறை முகம் வழியே இலங்கையில் இருந்து வந்துள்ளது.
கி.பி 12 - மருதுழான் உலகாளுடையான் என்ற வணிகன் பெருமாளுக்கு ஒன்றரை பவுன் பொன் வழங்கினான்.
கி.பி 13 - வீரராஜேந்திரச் சோழன் காலத்தில் நித்ய பூஜைக்கு உரிய Monthly budget திட்டம் தரப்பட்டுள்ளது.
கி.பி 13 - மூன்றாம் குலோத்துங்க சோழனின் புகழைக் கூறும் கல்வெட்டு, அவன் போரில் வெற்றி பெற்றதால் பெருமாளுக்கு மாலையில் ஏற்றும் சந்தியா தீப வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்ததைக் கூறுகிறது.
கி.பி 13 - வேத வழிபாட்டுச் சடங்குகளில் கலச கும்பங்களுக்குச் சுற்றும் பருத்தி நூலை ஓராண்டுக்குக் கொடையாக அளித்த செய்தி, நைவேத்தியத்திற்கு தானத்தொகை, பெருமாளுக்கு அழகிய குத்து விளக்கை அளித்த செய்தி உள்ளன.
கி.பி 1309 - குலசேகர பாண்டியன் காலத்துக் கல்வெட்டில் அரசனின் ஆணையின் பேரின் வயல்கள் சில தெள்ளியசிங்க பெருமாள் [கோயிலின் மற்றொரு முக்கிய மூர்த்தி] பூஜைகளுக்காக ”திருமயிலாப்பூர் ஊர் அவர்க்கு” [மக்களிடம் தரப்பட்டது] வழங்கப் பட்டது என்று கூறுவதால் மயிலையின் கிளைத்துணை ஊர் திருவல்லிக்கேணி எனப் புரியும்.
கி.பி 14 - பஞ்சநதி வாணன் நீலங்கரையன் [ECR Neelangarai] பெருமாளுக்கு நிலம் வழங்கினான்.
கி.பி 1564 - மூலஸ்தானத்தில் ருக்மிணித் தாயார், அனிருத்தன், ஸாத்யகி, தனி ரங்கநாதர், ஸ்ரீதேவி பூமி தேவி, தனிக்கோயில் தாயார் [வேதவல்லி] உற்சவர், பல கோயில் சீரமைப்பு வேளைகள், பொன் நகைகள் ஆகியன நரசிங்கதாஸன் என்பவரால் செய்து தரப்பட்டன.
கி.பி 1599 - திருமயிலாப்பூரில் இருக்கும் நகரத்தாரில் பட்டண ஸ்வாமி பெரியந்தை கோத்திரம் சின்னாச்சியண்ண செட்டி குமாரன் சிக்கிச் செட்டியார் திருவல்லிக்கேணி தெள்ளியசிங்கபெருமாளின் வஸந்த, சித்திரை உத்ஸவங்களுக்கு விழாக்கொடை அளித்தார்.
கி.பி 1646 - ஜார்ஜ் கோட்டை மீது தாக்குதல் செய்ய வந்த பாட்டிண்ச்சேரி ஃப்ரெஞ்ச் படை திடீரெனக் கோயிலுக்குள் புகுந்து கொண்டு அங்கிருந்து சில நாட்கள் போர் செய்தது.மக்கள் எவ்வளவு கெஞ்சிக் கேட்டுக் கொண்டும் படை கோயிலை விடவில்லை.
கி.பி 1673, செப்டம்பர் 14 - டச் கார வீரர்களும் இஸ்லாமிய வீரர்களும் போர் புரியும் போது தங்கும் படைவீடாக இக்கோயிலை எடுத்துக் கொண்டனர்.
மேலும் கி.பி 16ஆம் நூற்றாண்டின் வரையிலான வேறு கோயில்களின் கல்வெட்டுக்கள் கூட உள.
விவேகானந்தர் இக்கோயிலில் ப்ரசங்கம் செய்துள்ளார்.
மஹாகவி பாரதியார் பார்த்தசாரதியைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டே கண்ணன் பாடல்களை எழுதித் தள்ளியுள்ளார். தமிழையும் பாரதியாரையும் பிரிக்க முடியாது.அது போலவே திருவல்லிக்கேணி வாழ்வையும் அவரது சரிதத்தையும் பிரிக்க முடியாது.
அவர் இறுதியாக வாழ்ந்த வீடு கோயில் பின்புறம் இன்றும் அரசு நூலகமாக உள்ளது, வீட்டின் சில பகுதிகளில் புகைப்படக் கண்காட்சி உள்ளது.
தர்மம் மிகு சென்னையில் தர்மத்தை கீதை மூலம் எடுத்துக் கூறிய கண்ணன் கோயில் கொள்வது பொருத்தமே!