தர்மம் மிகு சென்னையில்....

 

இந்த நூலுக்கு ”தர்மம் மிகு சென்னையில்” என்று நாமகரணம் செய்ய ஆசை!

காரணம் இப்பெயர் பலரும் அறிந்ததே!

மேலும் மிக அழகிய அடைமொழியுடன் கூடிய இப்பெயரை இம்மண்ணுக்கு அளித்தவர் ஒரு மஹான்.

அவர் தான் வள்ளலார்.

மதராஸ் மண்ணில் எத்தனையோ மஹான்கள் ஜீவ சமாதி கொண்டுள்ளனர்.

மதராஸின் பெருமையே வடக்கு - மத்திய - தென் பாகங்களில் மஹா சிவ க்ஷேத்ரங்கள் இருப்பதே.

வடக்கே திருவொற்றியூர்

மத்தியில் திருமயிலைக் கபாலீச்சுரம்

தெற்கில் திருவான்மியூர்

மூன்றும் பாடல் பெற்ற ஸ்தலங்கள்

மேலும் மஹா சித்தர்கள் மூன்று பாகங்களிலும் ஜீவ சமாதி ஆகி உள்ளனர்.

வடக்கில் திருவொற்றியூரில் பட்டிணத்து அடிகள்

மத்தியில் சீதக்காதி தர்கா

தெற்கில் திருவான்மியூரில் ஸ்ரீமத் பாம்பன் குருதாஸ ஸ்வாமிகள்

மேலும் திருவொற்றியூரில் கலயனார், மயிலையில் வாயிலார் ஆகிய இரு நாயன்மார்கள் வாழ்ந்த மண் மதராஸ்.

திருமயிலையில் பேயாழ்வார் அவதரித்த திவ்யஸ்தலம் மதராஸ்.

ஜார்ஜ் டவுனில் மக்களின் ஆன்மீக வளர்ச்சிக்காக துபாஷி பேரி திம்மப்பா சென்னக் கேசவனையும் சென்ன மல்லீஸ்வரரையும் கோயில் கொள்ள வைத்தார்.

மேலும் சென்னையின் மூத்த தேவதை ஸ்ரீகாளிகாம்பாள் ஜார்ஜ் டவுனில் தம்புசெட்டி வீதியில் கொலு இருக்கிறாள்.அவள் தான் ஊர் தேவதை.மும்பையில் மும்பா தேவி, கொல்கத்தாவில் காளி, சென்னையில் காளிகாம்பாள்.

வீரசிவாஜியும், மஹாகவி பாரதியும் மனமுவந்து வணங்கிய அன்னை இவள்.

கி.பி 1823 - 1874 வள்ளலாரின் காலம்.

அடிமைத் தளையில் தேசம் சிக்குண்டு, பஞ்சம் பட்டினியால் சொமாலியா போல் தென்தேசத்து மக்கள் இறந்த போது, சாதி சமயப் பூசல்களும், உயிர்ப்பலிகளும், கண்மூடித் தனமான மதநெறிகளும், தனிமனித வெறியும் வேர் விட்டிருந்த காலத்தில் இராமலிங்க ஸ்வாமிகள் தோன்றி சமூஹத்தில் சில மாற்றங்கள் கொண்டு வந்தார்.

அவர் தன் 32 வயது வரை மதராஸின் ஏழு கிணறுப் பகுதியில் வாழ்ந்தார்.வீராசாமித் தெருவில் அவர் வாழ்ந்த வீடு, அவர் மேல் மாடி அறையில் 41 நாட்கள் வ்ரதம் மேற்கொண்டு, தணிகை முருகனைக் கண்ணாடியில் கண்ண இடமும் பாதுகாக்கப் படுகின்றன.யாரும் சென்று காணலாம்.அப்பகுதிகளில் அனேக வீடுகள் முன்னூறு வருடங்கள் ஆனவை.

வள்ளலார் ப்ராட்வேயில் வாழ்ந்த பச்சையப்ப முதலியாரிடம் தமிழ் இலக்கணம் கற்கச் சேர்க்கப் பட்டார்.அப்போது அவருக்கு ஒன்பது வயது.

இடைவெளியில் அடிக்கடி அவர் காணாமல் போவிடுவார்.நண்பர்கள் அவரைத் தேடிக் கொணர்வது வழக்கம்.

இந்தச் செயல்பற்றி அவரது அண்ணன் சபாபதிக்குச் செய்தி சொல்லப்பட்டது.

ஒரு நாள் அண்ணன் மறைவில் இருந்து தம்பியைக் கண்காணித்தார்.

இடைவெளியில் இராமலிங்கம் விடுவிடு என பூங்கா பகுதியில் உள்ள கந்தர் கோட்டத்துக்குள் செல்கிறார்.

முன்னூறு வருடங்கள் பழமைமிக்க முருகன் ஸ்தலம் கந்தர் கோட்டம்!

கோயிலுக்குள் சென்று நேரே முருகன் முன் தூண் ஓரம் நிற்பதும், வாயால் ஏதோ முனுமுனுப்பதுமாக இருக்கிறார், பின் வந்து விடுகிறார்.அன்று மாலை இராமலிங்கத்துக்கு அடியோ அடி!

மறுநாளும் இதே போல் கந்தர்கோட்டம் போய் விட்டார், இப்போது பச்சையப்ப முதலியாரே அவர் பின் சென்று கவனிக்க, யாரோ அபிஷேகக் கட்டளைக்கு தந்திருக்கும் வேளையில், அர்ச்சகர் ”யாராவது பாடுங்களேன்” என்று மூலஸ்தானத்தில் இருந்து ஒரல் எழுப்ப, ஒன்பது வயது இராமலிங்கம் அப்போது ஆசுகவியாய் தமிழ்த்தெய்வத்தின் கருணையால் வாய்மலர்ந்தது தான் கந்தர்கோட்ட தெய்வமணி மாலை.

அதில் தான் அவர் ”தர்மம் மிகு சென்னையில், கந்தர்கோட்டத்துள் வளர் தலமோங்கு கந்தவேளே!” என்று முருகனை விளிக்கிறார்.

அப்பெயரே காலத்தால் இவ்வூருக்கு நிலைத்தது.இன்றும் வந்தாரை வாழ வைக்கும் பூமி ஆக உள்ளது.ஆன்மீக அன்பர்களுக்கு மதராஸ் மிக அருமையான இடம்!

இன்றும் பூக்கடை அல்லது Park town கந்தசாமிக் கோயில் [கந்தர்கோட்டம்] போனால், கோபுரம் தாண்டி மஹாமண்டப முகப்பில் நியான் எழுத்துக்களில் ”தர்மம் மிக சென்னைக் கந்தகோட்டம்” என்றே வரவேற்பு உள்ளது.

நண்பர்களுடன் வந்த கந்தன்

கி.பி 1750களில் மதராஸ் கருப்பர் நகரத்தில் இரண்டு நண்பர்கள் வாழ்ந்தனர்.அவர்கள் தான் வேலூர் மாரிச் செட்டி, கந்தப்ப ஆசாரி.

இருவரும் கும்பினியின் கோட்டைக்குள் வியாபாரம், மரத் தச்சு சார்பாகப் பணிகள் செய்து பிழைத்தனர்.

மாதம் தோறும் க்ருத்திகை தினத்தில் பழைய மஹாபலிபுரச் சாலையில் உள்ள புகழ் வாய்ந்த திருப்போரூருக்குச் சென்று முருகனை வழிபடுவர்.அருணகிரியும் பேரூர் சிதம்பர ஸ்வாமிகளும் பாடிய முருகன் இவர்.

மாட்டு வண்டியில் செல்லும் இவர்கள் நிதானமாகவே ஊர் திரும்புவர்.

ஒரு கோடைக் காலத்தில் அவ்வாறு திருப்போரூர் சென்று வருங்கால், இளைப்பாற ஆலமரத்தடியில் உறங்கினர்.அப்போது அவர்தம் விழிப்புணர்வில் இறைவன், தன் சிலாமேனி அருகில் உள்ள புதர்களின் நடுவில் புதைந்து கிடப்பதாகவும் அதை மதராஸுக்குக் கொண்டு செல்லவும் கூறிட, உடனே எழுந்த கந்தப்ப ஆசாரி புதரைக் குடைய அதனுள் செம்மண், கடல் மண் அரிப்பில் ஒன்றரைஅடி உயரம் கொண்ட அழகிய முருகன் காலத்தால் தேய்ந்து கிடக்கக் கண்டார்.

மாட்டு வண்டியில் சிலை வைத்து, மதராஸ் வந்தனர் தோழர்கள்.

பூங்கா பகுதியில் த்தன் வீட்டருகேயுள்ள மரத்தடியில் கந்தர்ப்ப ஆசாரி ஒரு பிள்ளையாரை வைத்திருந்தார்.அவருக்கு அருகிலேயே முருகனை தேவியருடன் வைத்து விட்டார்.அதுவே இன்று தர்மம் மிகு சென்னைக் கந்தர் கோட்டம்!

கி.பி 1780களில் மதராஸின் செல்வந்த வணிகர்கள் பல பணிகள் செய்துள்ளனர்.சிறு கோயிலும் உருவானது.இன்றும் முருகனுக்கு எவ்விதக் குறையும் இல்லை.

பழைய மதராஸைக் காண விரும்பினால் பூக்கடைக் கந்தர்கோட்டம் வருக, இன்றும் அப்பழமை மாறாத ஊர், வியாபாரம் , உற்சவம் காணலாம்.

வள்ளலார், வண்ணசரபம் தண்டபாணி ஸ்வாமிகள், பாம்பன் ஸ்வாமிகள் இம்முருகனைப் பாடினர்.

மிக வித்யாசமான அழகிய பழனி ஆண்டவன் இக்கோயிலுள் உள்ளான்.

வள்ளாலையும் பாம்பன் ஸ்வாமிகளையும் சிலா வடிவில் பூஜிக்கக் காணலாம்.

மிகத் தொன்மையான முருகன், குட்டி சிலை..ஆனால் வள்ளல் பெருமானின் தமிழ் மாலை புனைந்தவன், முருகனை விட வேல் பெரியதாக உள்ளது, மிக அழகிய பாவை விளக்குகள் எனக் கோயில் மின்னுகிறது.

இவரது உற்சவர் தான் முத்துக்குமார ஸ்வாமி.

சற்று கண்களால் ஊடுருவிக் காண்க.

தங்க சிம்மாசனத்தில், தேவியருடன் அழகிய வேலும் கொடியும் தாங்கி நிற்கிறான்.

அதென்ன முகம் சரியாகத் தெரியவில்லையே?

***

இவனை மதராஸ் துறைமுகம் தோண்டும் போது கடலுள் இருந்து எடுத்தனர்.அதான் கடல் நீரால் முகம் அரிப்பாகி விட்டது, ஆனால் அழகன். பல்வேறு ஆபரணங்களும், மணிகளும், தங்கக் கவசமும் மின்ன, ஸ்ரீபாபநாசம் சிவனை, ”முத்துக்குமரய்யனே பக்தர்க்கருள் மெய்யனே” என்று சங்கராபரணத்தில் பாட வைத்து விட்டான்!

வரலாற்றின் ஆய்வில், மயிலைக் கடற்கரையில் இருந்த கபாலீச்சுரத்தின் முருகன் சன்னிதி உற்சவர் இவர்.கடல்கோளோ அல்லது கொள்ளையின் போதோ இவர் தடம்புரண்டு இன்று கந்தர்கோட்டம் ஏகி விட்டான்.

போர்த்துகீஸார் சாந்தோமில் கபாலீச்சுரத்தை அகற்றிய காலம் இவன் இங்கு வந்திருக்கலாம் என்கிறார்கள்.

இந்த அழகனை, தர்மம் மிகு சென்னையின் தனித் தலைவனை வணங்கி இந்நூலை அவனுக்கே உரித்தாக்குகிறேன்!

அன்று ஈரோட்டில் திண்டல் மலையில் இருந்து கல்வி கொடுத்தான், இன்று சென்னையில் இருந்து எழுத வைக்கிறான்!