Uni5 Community Blog
Uni5 Holistic Intelligence
- Details
- Parent Category: Blog
- Category: Uni5 Holistic Intelligence
- Hits: 2248
மதராஸின் முதல் போஸ்ட் ஆபிஸ்
ஒருவருடன் ஒருவர் கடிதம் மூலம் தொடர்பு கொள்வது மிகப் பழங்காலத்தில் இருந்து நடைமுறையில் உள்ளது.
இன்று நினைத்த மாத்திரத்தில் இணைய தளம் மூலம், அலைப்பேசி மூலம் ஏதோ ஒரு கண்டத்தில் இருக்கும் தோழனை, உறவைப் பார்த்துக் கொண்டே பேசும் நிலைக்குத் தொழில் நுட்பம் வளர்ந்து விட்டது.
ஒரு கடிதம் சென்று சேர்ந்து பதில் வருவதற்கே ஓராண்டு ஆன காலமும் வரலாற்றில் உண்டு, அதைக் கற்பனை செய்து பார்க்க இக்கால மக்கள் சற்று சிரமப்படக்கூடும்.
ஒரு வீட்டில் கடிதம் வருவதை எவ்வளவு சிறப்பாகக் கருதினர் என்பதை 1980,90 களில் வாழ்ந்தோர் உணர்வர்.
கிழக்கிந்தியக் கம்பெனியும் அடிக்கடி தன் திட்டங்களை இங்கிலாந்துக்குக் கடிதம் மூலம் அனுப்பி, ஆலோசனை செய்து, தேவையான அனுமதி பெறப் பல காலம் பிடித்துள்ளது.
பிழைப்புக்காக இவ்வூரில் வாழ்ந்த ஆங்கில வீரர்களும் தம் மனதில் உள்ள உணர்வுகளைத் தன் தேசத்து உறவுகளிடம், குடும்பத்திடம், தோழர்களிடம் கொட்டித் தீர்க்கத் தவித்துள்ளனர்.
மீண்டும் தாய் தேசம் திரும்புவதே பலருக்கும் வினாக்குறியாக இருந்த சமயத்தில் கடிதப் போக்குவரத்து கைகொடுத்தது.
அதே போல் குடும்பத்தை விட்டு ஊரை விட்டு வந்த நம்மூர் வீரர்களுக்கும் பலவிதத் தொழில் முனைவோருக்கும் கடிதம் கைகொடுத்தது.
கி.பி 1736, ஜூலை ஏழாம் நாள் கோட்டைக்குள் எப்படிக் கடிதப் போக்குவரத்தைத் தரமானதாகச் செய்வது என்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கி.பி 1786ல் மதராஸ் போஸ்ட் ஆபிஸ் தொடங்கப்பட்டது.
தேசம் முழுவதும் உள்ள முக்கிய ஊர்களுக்குத் தபால்கள் எடுத்துச் செல்லப் பட்டன.ஸ்டாம்பிற்கு பதில் ஆரம்ப காலத்தில் சிறிய செப்புத் தகடுகள் ஒட்டப்பட்டன.
மதராஸுக்குள் முதலில் மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகளில் போஸ்ட் மேன் சென்று பணியாற்றினார்.ஒரு கட்டத்தில் மோட்டார் வண்டியும் பயன்பட்டது.
கேம்ப்பெல் என்ற ஆங்கிலேயர் முதல் போஸ்ட் மாஸ்டர் ஆகப் பதவி ஏற்றார்.இவர் அன்றைய கவர்னரின் P.A வாகப் பணியாற்றியவர்.
விரைவில் ராபர்ட் சிஸ் ஹோமின் கைவண்ணத்தில் இன்று துறைமுகத்தின் எதிரில் காணப்படும் கம்பீரமான அழகிய ஜார்ஜ் டவுன் போஸ்ட் ஆபிஸ் எழும்பியது.
- Details
- Parent Category: Blog
- Category: Uni5 Holistic Intelligence
- Hits: 2533
மரீனா கடற்கரை
மதராஸின் மிக முக்கிய சுற்றுலா இடங்களில் ஒன்று மரீனா கடற்கரை. வருடம் முழுவதும் ஏதொ ஒரு ஊர் மக்கள், சுற்றுலாக் கூட்டம் காலை, பகல், மாலை வேளைகளில் இங்கு இருக்கிறது.ஆதரவற்ற, வீடற்றவர்கள் பலரும் ”வானமே கூரையாக” உறங்குவதும் இங்கு தான்.
பஜ்ஜி, சுண்டல், பூக்கள் விற்றே படித்துப் பட்டம் பெற்றவர்களும் உண்டு.
இன்று எத்தனையோ சிறுவியாபாரிகளுக்குச் சோறு போடும் கடற்கரை இது.
அன்று புனித தாமஸ் கால் வைத்து, ஆன்மீகப் பணியாற்றி, ஜீவசமாதி மேற்கொண்ட சாந்தோம் இக்கடற்கரையின் ஒரு அங்கம் தான்.
காலம் காலமாகப் பல தேசத்து மக்களையும், கப்பல்களையும் வரவேற்ற கரை, பல கடல் வழித் தாக்குதல்களைப் பார்த்த கரை, இன்று உழைப்பாளர் முதல் கல்விக் கண் கொடுத்த முதல்வர் காமராசர் வரை உயர்ந்தோர் சிலா ரூபத்தில் கொலுவிருக்கும் கரை, மஹாகவி பாரதியாரின் பாடல்களும் வீர சொற்பொழிவுகள், பாதச் சுவடுகளும் பதிந்த கரை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் மாசிமகம் அன்று கடலாடும் கரை, காதலர்களின் கரை, சினிமாக்களுக்குக் கதை சொல்லும் கதை, சோகத்தைத் திசைத் திருப்பும் கரை, உடற்பயிற்சிக்கு இடம் தரும் கரை, காணும் பொங்கலன்று மக்கள் கூட்டம் அலை மோதும் கரை, கோடை விடுமுறைக்கென்றே இயற்கை தயாரித்த விளையாட்டுக் கரை, அண்ணாதுரையும், மக்கள் திலகம் எம்.ஜி.ராமச்சந்திரனும் நீள்துயில் கொள்ளும் கரை, ஆழிப்பேரலைகளின் போது அதிகம் உயிர்ப்பலி கொள்ளாத கரை....கடல் அன்னையின் புகழ் இவை.
சுமார் 13 கிலோமீட்டர் நீள வாக்கில் கோட்டை முதல் அடையாறு வரை மரீனா அமைகிறது.உலகில் இரண்டாம் நீளமான கடற்கரை, ஆனால் சுத்தம் வேண்டும்.
கோட்டைக்கு எதிரே அமைந்த கடலை எவ்வளவு தூரம் ஆங்கிலேயன் ரசித்தான் என்று தெரியவில்லை.காரணம் பல தேசத்துப் படைகள் எப்போது வேண்டும் ஆயினும் கோட்டையைத் தாக்கும் அபாயம் தான் இருந்துள்ளது.
ஆனால் மதராஸின் மிக முக்கிய சில இடங்கள் இக்கரையின்கண் அமைந்தன.
கமிஷ்னர் அலுவலகம், ஐஸ் ஹவுஸ், ராணி மேரிக்கல்லூரி, இன்றைய கலங்கரை விளக்கு, இந்திய வானொலி, தூர்தர்ஷன் தொலைக்காட்சி, பல்கலைக்கழகம், ப்ரெஸிடென்ஸிக் கல்லூரி ஆகியன அக்கால வாசனையுடன் இன்றும் உள.
கூவம் ஆறு கடலுடன் சங்கமிக்கும் இடத்தை நேஃபியர் பாலத்தில் இருந்து ரசிக்கலாம்.
கூவத்தின் அருகில் சென்று தொலைதூரப் பார்வை செலுத்த மாநகரம் பழைய சாயலில் இன்றும் தரிசனம் தருவதைக் கண்டேன்.
மயிலை-திருவல்லிக்கேணியின் கடல் இந்த மரீனா தான்.
கி.பி 16ஆம் நூற்றாண்டில் சில மணல் மேடுகளும், உப்பங்கழிகளும் கடற்கரையில் இருந்தன.
காலத்தின் போக்கில் அதீத புயல்மழைக் காரணமாகக் கடலின் போக்கு மாறி வருவதைக் காண்கிறோம்.
இன்று கடல் தூரமாக உள்ளது. கோட்டை எழுப்பப்பட்ட காலத்தில் அலைகள் கோட்டை மீது கூட படும் அளவுக்கு அருகில் கடல் இருந்துள்ளது.
1944ல் சாலைக்கு அருகில் இருந்ததாக என் அம்மாவின் அப்பா கூறினார், அவர் ப்ரெஸிடென்ஸியில் படித்தவர்.
கோட்டையுடன் சேர்த்து, மணல் மேடுகளையும் கூவத்தின் அதிரடி வெள்ளப் போக்கையும் சமாளிக்க வேண்டிய சவாலும் ஆங்கிலேயருக்கு இருந்தது.
இக்கடற்கரையின் மீனவர்க் குடிகள் தான் உண்மையான பழம்பெரும் சென்னைவாசிகள்.அவர்தம் நிலங்களை நாயக்க மன்னன் ஆங்கிலேயருக்குக் கொடுத்தார் என்பது வரலாறு. பூம்புகாரைப் போலவே இங்கும் மீனவரி பட்டிணப்பாக்கம் உள்ளது.
கி.பி 1881ஆம் ஆண்டில் தான் முறையான துறைமுகம் கோட்டையின் வடக்குக் கடல் பகுதில் எழுப்பப் பட்டது.
கி.பி 1870ல் மதராஸ் வந்தார் ஆங்கிலேய அதிகாரி மவுண்ட் ஸ்டார்ட் எலிஃபின் ஸ்டோன்.இவர் கி.பி 1881 - 1886 வரை கவர்னராக இருந்த காலத்தில் தான் துறைமுகம் கட்டப்பட்டது.மேலும் கடற்கரை மரீனா என்று பெயர் பெற்றது. மரீனா - கடல் புறத்தே - OF THE SEA என்று பெயர்.கி.பி 1884ல் இவர் தரமான கடற்கரைச் சாலையை உருவாக்கினார்.
ஆனால் நேற்று கோட்டையின் அருங்காட்சியகத்தில் உள்ள ஃப்ரெஞ்சின் தேசிய தேவதை மரீனேவைப் பார்த்தது முதல் மேல் சொன்ன சரித்திரம் என்னுள் மீண்டும் மாறுபட்டது.
OF TE SEA என்று கூற வேண்டியது இல்லை.
ஃப்ரெஞ்சு தேவதையின் பெயருக்கு - ”சுதந்திரம் மற்றும் பகுத்தறிவின் சக்தி” என்று பொருள்.
மூன்று ஆண்டுக் காலம் ஃப்ரெஞ்ச் கோட்டையை வசம் கொண்டு மதராஸை ஆண்ட காலத்தில் அவர்தம் தேசிய தேவதையின் பெயர் கடல் அன்னைக்கும் சூட்டப்பட்டுள்ளது.
கடல் என்பது உயர்ந்த ஆளுமையின் சின்னமும் கூட அல்லவா?
கடற்கரையில் முதல் மீன் காட்சி அகம் - கி.பி 1901ல் தொடங்கப்பட்டது.
கடற்கரையில் காணும் உழைப்பாளர் சிலை, காந்தியின் தண்டி யாத்திரை ஆகியன சென்னை அரசு கலை ஓவியக் கல்லூரியின் முதல் முதல்வர் டெபி ராவ் செளத்ரியால் உருவானவை.1968ல் முதல் உலகத் தமிழ் மாநாட்டை ஒட்டிப் பலத் தமிழறிஞர்தம் சிலைகள் கடற்கரையின் நெடுகிலும் வைக்கப்பட்டன.
வீரமாமுனிவர், ஒளவை, பாரதியார், பாரதிதாசன், கம்பர், திருவள்ளுவர், அண்ணா சமாதியில் இளங்கோவடிகள், கண்ணகி, கார்ட்வெல் சமீபத்தில் நடிகர்த் திலகம் சிவாஜி கணேசன் எனப் பலர் மரீனாவின் காற்றை நுகர்கிறார்கள்.
- Details
- Parent Category: Blog
- Category: Uni5 Holistic Intelligence
- Hits: 2353
மதராஸ் வனத்துறை மற்றும் முதல் உயிரியல் பூங்கா...
கி.பி 1836ல் மதராஸுக்குக் கப்பல் ஏறி வந்தவர் ஆங்கில மருத்துவர் எட்வர்ட் க்ரீன் பேல்ஃபர். இவரது பெயரிலேயே பசுமை உள்ளது!
இவர் இந்தியா முழுவதும் பயணம் செய்து, தட்பவெப்பம், பருவ மாற்றம், தாவர வளர்ச்சி ஆகியவற்றைப் பற்றி ஆய்வுகள் செய்து ஆங்கில அரசுக்கு அளித்தார்.அவரது அறிவுரையின் பேரில் மதராஸ் வனத்துறை உதயம் ஆகிப் பல அரிய வகை மரங்களை வளர்த்து வந்துள்ளது.
மேலும் அவர் எழும்பூர் அருங்காட்சியகத்தில் ஒரு புலியையும் ஒரு சிறுத்தையையும் கூண்டில் இட்டு மக்களின் பார்வைக்கு வைத்து முதல் மிருகக்காட்சி சாலையை ஆரம்பித்தார்.அதன் பின் கி.பி 1855ல் அது இன்றுள்ள வண்டலூர் தேசிய உயிரியல் பூங்காவாக மலர்ந்தது.
__________________________________________________________________
- Details
- Parent Category: Blog
- Category: Uni5 Holistic Intelligence
- Hits: 2348
மதராஸ் வானியல் ஆய்வு நிலையம்...
கி.பி 1787ல் நுங்கம்பாக்கத்தில் ஒரு ஆங்கிலேய அதிகாரி வாழ்ந்தார்.
அவர் பெயர் வில்லியம் பெட்ரீ.
அவருக்கு இளமையிலேயே வானியல் ஆய்வில் ஆர்வம் அதிகம்.அதன் காரணமாக மதராஸுக்குப் பயணம் ஆகும் முன் தரமான சில தொலைநோக்கிகள், காம்பஸ் போன்ற உபகரணங்களை வாங்கிக்குக் கொண்டே கப்பலில் ஏறினார்.
இரவில் மதராஸின் வானிலையை ஆராய்வதே இவரது பொழுது போக்கு ஆகும்.கம்பெனியின் கப்பல் படையும், சரக்குக் கப்பல்களும் இவரது வழிகாட்டுதலை அடிக்கடிப் பயன்படுத்திக் கொண்டன.
ஒரு காலத்தில் இங்கிலாந்தில் இவரது வானியல் ஆய்வுப்பணி தேவைப் பட்டது, இவரும் தாயகம் சென்று அதைச் செய்து முடித்து, ராணியின் அனுமதியுடன் மீண்டும் மதராஸ் வந்து ஆரம்பித்து வைத்ததே இன்று நாம் காணும் MADRAS OBSERVATORY.
- Details
- Parent Category: Blog
- Category: Uni5 Holistic Intelligence
- Hits: 2265
மதராஸின் முதல் மருத்துவக் கல்லூரி...
கி.பி 2.2.1835 அன்று மதராஸில் பணியாற்ற அல்லோபதி மருத்துவம் அறிந்த மருத்துவர்களை உருவாக்க ஆங்கிலேய அரசு சென்ட்ரல் ரயில் நிலையத்தின் முன் உள்ள தம் மருத்துவக்கூடத்துடன் இணைந்த சிறிய மருத்துக்கல்விப் பள்ளியையும் உருவாக்கியது. பின்னர் 1.10.1850ல் அது மதராஸ் மெடிக்கல் கல்லூரி ஆனது.
உலகின் முதல் பெண் அல்லோபதி மருத்துவர்...
கி.பி 1875ல் உலக நாடுகள் பெண்களுக்கு மருத்துவக் கல்வியை நிராகரித்த அதே வேளையில் மதராஸ் மருத்துவக் கல்லூரி மேரி ஆன் டெகாம்ப் ஷார்லிப் என்ற பெண்ணை உலகின் முதல் மருத்துவ மாணவியாக அனுமதித்துக் கல்வி தந்தது! இவரை அடுத்தே ரோம் மெடிக்கல் பள்ளியில் மரியா மாண்டிசொரி போராடி அனுமதி பெற்று இத்தாலியின் முதல் பெண் மருத்துவர் ஆனார்.
அதற்கு நன்றிக் கடனாகத் தான் அவர் தமிழகத்தில் வாழ்ந்து, இன்று திருவல்லிக்கேணியில் உள்ள விக்டோரியா பெண்கள் - குழந்தைகள் மருத்துவமனையை உருவாக்கி அர்ப்பணித்தார், ராணியின் அனுமதியுடன்.செய்ந்நன்றி மறவாத மருத்துவர் வாழ்க!
- Details
- Parent Category: Blog
- Category: Uni5 Holistic Intelligence
- Hits: 2577
மதராஸில் திரைப்படக் கலை....
சென்ட்ரலுக்கு அருகில் இருக்கும் அழகிய [இன்று வீணாக்கிக் கொண்டு இருக்கும்] ப்ரம்மாண்ட விக்டோரியா பப்ளிக் ஹாலில் தான் கி.பி 1897ல் வெண்திரையில் ஒலி இல்லாத மெளனப்படம் அரங்கேறியது.
எட்வர்ட் என்ற ஆங்கிலேயர் கப்பல் மூலம் இப்படத்தை வரவழைக்கு நம்மூரில் காட்டினார்.
அவரையே ”கோலிவுட்டின் தந்தை” எனலாமே!
ஐரோப்பிய ரயில் நிலையம், தொழிற்சாலைகள் ஆகியன படங்களாகக் காட்டப் பட்டன.
மதராஸின் முதல் திரையரங்கம்
அதன்பின் மவுண்ட் ரோட்டில் கி.பி 1900ல் வார்விக் மேஜர் - ரெஜினால்ட் என்ற இரு நண்பர்கள் ”எலக்ட்ரிக் த்யேட்டர்” கட்டினர்.அதுவே மதராஸின் முதல் திரையரங்கம். மெளனப்படம் மக்களைச் சலிப்படைய வைத்த நிலையில் மேற்கத்திய இசை தனியே அரங்கில் காட்சிக்கு ஏற்ப வாசிக்கப்பட்டதாம்.
வயின் ஷாப், டி ஏஞ்சிலிஸ் உயர்தர உணவகம் ஆகியன அருகில் இருந்தன, மக்கள் ஒரே படத்தைக் காசு கொடுத்துப் பலமுறை பார்த்தனர்.ஆனால் திடீர் நஷ்டம் உண்டாகி கி.பி 1915ல் எலக்ட்ரிக் த்யேட்டர் விற்கப்பட்டு, இன்று இந்திய தபால் துறையின் சொத்தாக உள்ளது.
மதராஸின் முதல் Drive in cinema theather...
கி.பி 1911ல் க்லூக் என்ற ஆங்கிலப் பெண்மணி ப்ராட்வேயில் ”பயாஸ்கோப்” என்ற drive in cinema theater உருவாக்கினார். தேசத்தின் முதல் ட்ரைவ் இன் த்யேட்டர் இதுவே எனலாம்.
மதராஸின் முதல் இந்தியர் கட்டிய திரையரங்கம்...
கி.பி 1915ல் தெலுங்கர் ரகுபதி வெங்கைய்யா என்ற புகைப்படக்கலைஞர் எலக்ட்ரிக் த்யேட்டர் அருகில் தன் அரங்கைக் கட்டினார்.அதன் பெயர் தான் ”கெயிட்டி” - 2005ல் தன் ஓய்வை மேற்கொண்டு இன்று ஒரு வணிக வளாகமாக உருமாறி விட்டது.
கி.பி 1909ல் இங்கிலாந்து மன்னன் ஐந்தாம் ஜார்ஜ், பாரத தேசம் வந்தார். மதராஸில் அவருக்கு மிகுந்த வரவேற்புக் கொடுத்தனர்.அப்போது கிராமஃபோன் இணைக்கப்பட்ட ப்ரொஜக்டர் பயன்படுத்தப் பட்டது.ஆனால் இதில் உள்ள பேச்சுக்கும் படத்துக்கும் சம்பந்தம் இல்லை.இதை ரகுபதி மிகுந்த விலை கொடுத்து வாங்கித் தன் அரங்கில் வைத்துப் படம் காட்ட எலக்ட்ரிக் அரங்கம் வீழ்ச்சி கண்டது.
ப்ராட்வேயின் தெருக்களில் முதலில் இவர் படம் காட்டினார், மக்களின் வரவேற்பும் பணமும் கைகூட விரைவில் மவுண்ட் ரோட்டில் பெரிய அரங்கை எழுப்பினார்.தமிழக மக்களுக்கு ”சினிமா பயித்தியம்” ஆரம்பம் ஆன கதை இது தான்.....
மதராஸின் முதல் டென்ட் கொட்டாய் சினிமா...
ரயில்வே பணியாளர் சாமிக்கண்ணு வின்சென்ட் என்பவர்தான் சென்ட்ரலுக்கு அருகில் கூடாரம் இட்டு ரயிலுக்குக் காத்திருக்கும் பயணிகளுக்கு சினிமாக் காட்டினார்.
மதராஸின் கோலிவுட் தோன்றிய கதை...
ரகுபதி வெங்கைய்யா தானே சினிமா எடுக்க முற்பட்டார், பணப்புழக்கம் அதிகம் இருந்த காரணத்தால் அவர் கேமராக்கள் வாங்கி புராணக் கதைகள் இயக்கினார்.தமிழ்ச் சினிமாவின் தந்தை இவர்.
இவரைப் போல் பலரும் முயற்சித்ததால், விரைவில் சில ஸ்டுடியோக்கள் கோடம்பாக்கத்தில் தோன்றின.ஆரம்பத்தில் ஆங்கிலேயரின் குதிரைப் படை பராமறிக்கவே கோடம்பாக்கம் கிராமம் விலைபேசப்பட்டது.அங்கிருந்து ஆற்காடு நபாவின் ஊருக்குக் குதிரைப்படை போகும் சாலை அமைந்து இன்று ”ஆற்காடு சாலை” ஆனது.
ஆனால் கீழ்ப்பாக்கத்தில் கி.பி 1934ல் முதல் சினிமா எடுக்கும் ஸ்டுடியோவும், கோடம்பாக்கத்தில் கி.பி 1946ல் AVM studioவும் ஆரம்பம் ஆயின.
- Details
- Parent Category: Blog
- Category: Uni5 Holistic Intelligence
- Hits: 2375
மதராஸின் முதல் அச்சகம்....
இன்று எப்போது வேண்டுமானாலும் எவ்விடத்திலும் கையில் அலைப்பேசியில் டைப் செய்து அதை உடனே இணையதளத்தில் பல ஆயிரம் பேரிக்கும் தான் எண்ணியதை வெளியிடும் வசதி வந்து விட்டது.
இதற்குக் காரணம் அச்சுத் தொழில் தான்.எந்திரத்தில் மனிதர்கள் உழைத்து உருவேற்றிய எழுத்துக்கள் இன்று டிஜிட்டல் வடிவில் வந்துள்ளன.
பாரத தேசத்தின் மொழிகளில் முதலில் அச்சேறியது இனிமைத் தமிழே!
கி.பி 1554ல் போர்ச்சுகல் தேசத்தில் கார்டிலா என்ற கிறிஸ்துவ நூல் அச்சானது.
அதன் பின் கி.பி 1578ல் தமிழகத்தில் இருந்து நன்கு தமிழ் கற்ற கிறிஸ்துவர்கள் சிலரைக் கொண்டு லிஸ்பன் நகரில் டாக்ட்ரினா கிறிஸ்டியானா என்ற மத நூலை அச்சிட்டனர். இதற்குத் தம்பிரான் வணக்கம் என்று பெயர். வெறும் 16 பக்கங்கள் தான் இருந்தன.
அதன் பின் கி.பி 1712ல் தரங்கம்பாடிக்கு வந்த ஜெர்மன் பாதிரியார் சீகன்பால்க் தன் அயரா முயற்சியால் அச்சுக்களை உருவாக்கி முதல் பைபிளை மொழிபெயர்த்து கி.பி 1715ல் வெளியிட்டார்.இவரே இந்திய அச்சுத்தொழிலின் தந்தை!
கி.பி 1761ல் தான் மெதுவாக அச்சுத்தொழில் மதராஸுக்குள் அடியெடுத்து வைத்தது.
அவ்வாண்டில் ஃப்ரெஞ்சுக்கும் ஆங்கிலேயருக்கும் கடுமையான போர் எழுந்து ஆங்கிலேயர் போரை வென்றனர்.எப்போதும் போல் பொருட்களைக் கொள்ளை அடித்த ஆங்கிலப் படை, [ஐர் கூட் அதிகாரியின் ஆலோசனையின் பேரில்] தமிழ் அச்சுக்களை, எந்திரத்தை ஜார்ஜ் கோட்டைக்குக் கொண்டு வந்து சேர்த்தது.ஆனால் யாருக்கும் அதைப் பயன்படுத்தத் தெரியவில்லையாம்!
சில ஆண்டுகள் கழித்து தமிழ் அச்சுக் கோர்க்கும் கலை அறிந்த ஃபெப்ரீஷியஸ் என்ற பாதிரியார் மூலம் வேப்பேரியில் S.P.K press உருவாகி இன்று ப்ராட்வே பஸ்நிலையம் அருகில் C.L.S Pressஆக மாறியுள்ளது.
மிகத் தொன்மையான நூல்கள் இங்கு இன்றும் கிடைப்பது விசேஷம்.
மதச் சார்பான பணிகளுக்கே அச்சுக்கலை ஆரம்பத்தில் உதவியுள்ளது.புதுமையான மேற்கத்திய காகிதத்தில் அச்சாகி வரும் ஆன்மீக நெறிகள் மத மாற்றத்துக்கு ஒரு நாகரிக நவீன காரணமும் ஆகி உள்ளதைக் காண்க.ஆனால் பல நூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகளைப் பேணும் நாம், முதல் தமிழ் பைபிளைப் பேணாமல் போனது சரியில்லை.
- Details
- Parent Category: Blog
- Category: Uni5 Holistic Intelligence
- Hits: 2544
மதராஸ் வானில் பறந்த முதல் மனிதர்...
மதராஸில் மவுண்ட் ரோட்டில் கி.பி 1910ல் மிக ப்ரம்மாண்டமான தரமான மேலைதேசத்து உணவகம் ஒன்று இயங்கியது. [அப்போதே மல்டி க்யூஸைன்] வந்துள்ளது தம்பீ....]
அதுவே மதராஸில் செட்டில் ஆகிவிட்ட ஃப்ரெஞ்ச்காரர் டி ஏஞ்சிலி என்பவர் ஆரம்பித்த டி ஏஞ்கிலிஸ் ஆகும். மதராஸின் மிகப் பெரிய உணவகம் இது தான் என்று கூறப்படுகிறது.
அவர் தம் சுய உழைப்பால் மதராஸின் செல்வந்தர்களுள் ஒருவர் ஆனார் என்பதில் ஐயம் இல்லை.
தன் தாய் தேசத்தில் ஆகாய விமானம் இயங்குவதை அறிந்து கொண்ட அவர், அதைப் பற்றிய முக்கியமான தொழில்நுட்பத் தகவல்களைச் சேகரித்தார். பெரம்பூரில் ஆங்கிலேயருக்கு ரயில் பெட்டிகள் செய்யும் சிம்ஸன் கம்பெனியை அனுகினார்.அவரது தகவல்களைக் கொண்டு சிறிய விமானம் தயார் ஆனது.
டி ஏஞ்சிலி அதை ஓட்டிப்பழகிக் கொண்டு அதை வைத்தும் சம்பாதிக்க ஆரம்பித்தார்.
அது எப்படி?
மார்ச் மாதத்தில் தீவுத்திடலில் [Island Ground - First air port in India] ஒரு அணா, மூன்று அணா டிக்கட் விற்றார்.மூன்று அணா டிக்கட் நாற்காலியில் உட்கார்ந்தனர்.மற்றவர்கள் தரை டிக்கட்....
அனைவரும் பார்க்கப் பார்க்க விமானம் ஏறிப் பறந்தார் மனிதர், கடல் மீது போனார், ஜார்ஜ் டவுன் மீது போனார்....சுமார் இருபது நிமிடங்களில் தரை இறங்கினார்.
”வானத்தில் மனிதன் பறக்கிறான்....பாருங்கள்!” என்றே விளம்பரம் தரப்பட்டுள்ளது. அதுவும் அவரது உணவகத்தின் வாயிலில் ஈர்க்கும்படியான விளம்பரத் துணிகள் இருந்தன.
இதைப் பற்றி மஹாகவி பாரதியார் சுதேசமித்ரனில் கட்டுரையும் எழுதியுள்ளார்.ஆனால் டி ஏஞ்சிலிஸ்ஸுக்கு வானில் பறக்க அனுமதி தர ஆங்கிலேயர் உடனே அனுமதி தரவில்லை என்பதே உண்மை!
- Details
- Parent Category: Blog
- Category: Uni5 Holistic Intelligence
- Hits: 2291
மதராஸில் நடக்கும் போது....
கோட்டைக்குள் இன்று ஞாயிற்றுக் கிழமையின் அமைதி. [21.2.201
அந்த அமைதியில் வரலாற்றின் பக்கங்களைப் புரட்டுகிறேன்.
கோட்டையில் வடக்கு வாயிலின் வெளியே வந்தால் குப்பையும் புதருமாக இருக்க, அருகில் பல கூரை வீடுகள்.
காலம் காலமாக இவ்விடத்தில் கோட்டையின் சுவருக்கு வெளியே இருப்பதாகச் சொன்னார்கள், ஓ இவர்கள் மூதாதையர் அன்றைய கம்பெனிக்கு நெசவாளராகவோ, வீட்டுப் பணிகளுக்காகவோ, குற்றேவல்களுக்காகவோ வாழ்ந்திருக்கலாம்.
கோட்டையின் பெரும்பாலான பகுதி கேட்பார் அற்று வீணாகிக் கொண்டு இருக்கிறது.
எத்தனை எத்தனை வீரர்கள் அலுவலர்கள் குடும்பங்கள் மக்கள் இதனுள் வாழ்ந்தனர்?!
அவர்தம் கனவுகள், ஏக்கங்கள், அழுகை-சிரிப்புகள், உணர்ச்சிகள், மனித இயல்புகள் எத்தனை எத்தனை?
நம்மூர் இளைஞர்கள் எத்தனை ஆயிரம் பேர் போர் வீரர்களாகப் பணி ஏற்றனர்? மாண்டனர்?
மீண்டும் அன்றைய மதராஸின் சாலைகளில் நடக்கும் போதும், பாழடைந்த வீடுகளைக் காணும் போதும் மனதில் அம்மக்கள் தம் வாழ்க்கை திரையிடப்படுகிறது.
பாழான வீடுகளின் ஜன்னல்களின் உள்ளே அவர்தம் வாழ்க்கையைத் தேடினேன், கதவுகளைத் திறந்து ஆங்கிலேயக் குடும்பம் வாக்கிங் போக வெளியே வருவது போல் கற்பனை, மாடிகள் பெண்கள் ஊர் நிலைமை, கடிதத்தின் மூலம் தம் தேசத்தின் நிலை ஆகியனவற்றைப் பேசும் சப்தம் கேட்கிறது.....
இவ்வீடுகளில் கருப்பர் நகர மக்கள் பணி செய்ய வருவதும், போவதும், வீரர்களின் அணிவகுப்பும், பயிற்சிகளும் தெரிகின்றன......
தேசம் விட்டு தேசம் வந்து, இம்மக்களுடன் கலந்து வாழ்ந்து மறைந்த மக்களின் கதை.
மீண்டும் தம் ஊரைப் பார்ப்போமா என்று ஏங்கியவர்தம் கதை.
கோட்டைக்குள் சென்று அன்றாடப் பணிகளை முடித்துக் கொண்டு கருப்பர் நகரத்தில் தம் வீடுகளுக்குச் சென்ற நம்மூர் மக்களின் கதை.
பாரத தேசத்தை முழுயாக ஆட்சி செய்த வைத்த சக்தியைக் கொடுத்த மதராஸ் கோட்டையின் கதை.
வெத்து வீண் போகத்துக்கும் புலனிச்சைக்கும் பொருளுக்கும் மது-மாதுக்கும் ஆசைப்பட்டு துணை போய் அடிமைகள் ஆன ஆட்சியாளர்கள் தம் கதை!
கோட்டைக்குள் அதிகம் ராணுவம் சம்பந்தமான அலுவலங்கள் பல உள.அவை உள்ள அக்காலக் கட்டிடங்கள் ஒழுங்காக உள.
தமிழக அரசு அலுவலங்கள் பல புதியவை.
மதராஸின் வீதிகளில் நம்மூர் வாசிகள் போடும் குப்பையை ஆங்கிலேயன் பார்த்தால் அழுவான்!!!
காலம் கடந்து மழை, புயல், கடல் காற்றுக்கும் ஈடு கொடுத்து நிற்கும் பல இரும்புக் குழாய்கள் [குடிநீர் வசதி] உள்ளன.
கிழக்குப் பகுதியில் கடல், காற்று, எப்போதும் டச்சோ, ஃப்ரெஞ்சோ தாக்குவான் என்ற பயம், சாந்தோமிலிருந்து எப்போது வேண்டுமானாலும் போர்த்துகீஸ் தாக்கும் என்ற எண்ணபயம் என கிழக்குக் கோட்டை வாசல் விழிப்புணர்வுடன் பலத்த பாதுகாப்புடன் இருந்துள்ளது.
அத்தேசத்து - இத்தேசத்து மக்களின் உறவு, காதல், கல்யாணங்கள், சோகக் கதைகள் என romantic life story களும் மதராஸுள் நிகழ்ந்திருக்க வாய்ப்புகள் உண்டு.
நம்மூர் அதிகாரிகள், அரசர்கள் பெரும்பாலும் வாலாஜா வாயில் வழியவே கோட்டைக்குள் வந்துள்ளனர்.
விருந்துகளின் போது ஆங்கிலேயர்கள் அணிந்த party wear dress, China clay vessels நம்மை ப்ரமிக்க வைக்கும்! எத்தனை போகங்களை நுகர்ந்தனர்?!
மதராஸின் வீதிகளில் நடக்கும் போது இவை எல்லாம் எண்ணிக் கொண்டே போனேன், படங்கள் எடுத்தேன், ஒரு வித சோகத்துடனும் வெளியே வந்தேன்.
இருப்பதை எல்லாம் விட்டுவிட்டு ஒரே நாளில் தம் ஊருக்குப் புறப்படும் realityயை ஆங்கிலேயர் ஏற்றுக் கொண்டான்.
அதுவும் ஓர் ஆன்மீகப் பயிற்சியே!
இக்கட்டுரை மிகவும் ஆழ்ந்த எண்ணத்தின் பின்னணியில் எழுதப்பட்டது!
என் காதுகளில் அன்று வாழ்ந்த மதராஸிகள் சொன்னதைப் பதிவு செய்கிறேன்.
வங்கக் கடலின் காற்றில் அவர்தம் மூச்சும், வரலாறும் எப்ப்போதும் இருக்கும்.
- Details
- Parent Category: Blog
- Category: Uni5 Holistic Intelligence
- Hits: 2375
St.ஜார்ஜ் கோட்டை அருங்காட்சியகம்
21.2.2016
இன்றும் ஜார்ஜ் கோட்டையின் அருங்காட்சியகம் சென்றேன்.
முழுமையாகப் பார்த்தேன்.
மனதை மிகவும் கவர்ந்த விஷயங்கள் பல.
மக்களும் மாணவர்களும் அவசியம் பார்க்க வேண்டிய பல பொருட்கள் உள.
நம்மை ஆட்சி செய்தோரின் ஞாபகச் சின்னங்கள்!
***
பீரங்கிகள், ஆயுதங்கள் [துப்பாக்கிகள், வாள், கோடரிகள்], குண்டுகள், எம்டன் கப்பல் வீசிய குண்டு, சீருடைகள், பாராட்டுப் பதக்கங்கள், அரச சின்னங்கள், அதிகாரிகள், இந்திய அரசர்தம் ஓவியங்கள், கொடிகள், சர்ச்சின் பயன்பாட்டுப் பொருட்கள், கி.பி 1640 ஆம் ஆண்டின் பைபிள், ப்ரார்த்தனை நூல், சர்ச் தஸ்தாவேஜுகள், உடைகள், பீங்கான் அழகுப் பொருட்கள், பாத்திரங்கள், நாணயங்கள், கோட்டையின் பரிணாம வரைப்படங்கள், விடுதலை வீரர்களின் பெயர்ப்பட்டியல், கோட்டையில் முதன்முதலில் ஏற்றிய மூவர்ணக்கொடி, ஹிந்து நாள் இதழின் கட்டுரை [ஆகஸ்ட் 15, 1947] எனப் பல பொருட்களைக் காணமுடிந்தது.
கார்ன் வாலிஸின் மிக ப்ரம்மாண்ட சிலை, அவரிடம் திப்பு சுல்தானின் இரு பால்யப் பிள்ளைகளும் பிணைக்கைதிகளாகத் தரப்படும் அவலத்தைக் கல்லில் காட்டியுள்ளனர்.
மரீனா - ஃப்ரெஞ்சின் ”பாரத மாதா” Lady of France - என்று கூறலாம். அவள் விடுதலை மற்றும் பகுத்தறிவின் அடையாளம்.அவளது அழகிய சிலையும் உள்ளது.
கோட்டையின் வரலாற்றை எளிய முறையில் இருமொழிகளிலும் தந்துள்ளனர்.பார்வை அற்றவர்க்கு ப்ரெயில் முறையில் தகவல் தரும் உதவியும் இருக்கிறது.பராமரிப்பு மிகவும் தூய்மையாக உள்ளது.
என்ன...! வீடியோ, புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை!
காலம் தாண்டிய சம்பவங்களை மனம் எண்ணிட இவை வழி செய்யும்.